2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா'
2020ம் ஆண்டில் கொரோனா தாக்கம் வந்த போது தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் தாக்கம் முழுவதும் குறைந்த பிறகே மீண்டும் முழுமையாக செயல்பட்டது. அதன்பின் 2021ல் இரண்டாவது அலை வந்த போதும் தியேட்டர்கள் செயல்பாடு பாதிக்கப்பட்டது. அந்த கால கட்டங்களில் படங்களை தியேட்டர்களில் வெளியிட முடியாதவர்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக படங்களை வெளியிட்டார்கள். அந்த இரண்டு வருடங்களில் நிறைய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின.
பின்னர் அது படிப்படியாக அப்படியே குறைந்து போனது. கடந்த 2025ம் வருடத்தில் 5 படங்கள் மட்டுமே ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின.
இந்த 2026ம் வருடத்தில் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான முதல் படமாக நேற்று ஜனவரி 13ம் தேதி 'அனந்தா' திரைப்படம் வெளியாகி உள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்ஜி மகேந்திரா, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சத்யசாய்பாபாவின் மகிமைகளைப் பற்றிச் சொல்லும் ஆன்மிகப் படமாக உருவாகியுள்ளது. ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகி உள்ளது.