'திரெளபதி 2' படத்துக்காக எடை கூடினேன்: ரக்ஷனா இந்துசூடன்
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'திரௌபதி 2'. மோகன்ஜி இயக்கி உள்ளார். ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படம் வருகிற 23ம் தேதி வெளியாகிறது.
இதை முன்னிட்டு படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் நாயகி ரக்ஷனா இந்துசூடன் பேசியதாவது: நெருப்பில் இருந்து பிறந்தவள் திரெளபதி. அந்தப் பெயரை 'திரெளபதி 2' படத்தில் எனக்கு கொடுத்த இயக்குனர் மோகன் சாருக்கு நன்றி. இந்த படத்தில் திரெளபதி தேவியாக நடித்துள்ளேன்.
இந்த கதை 14ம் நூற்றாண்டில் நடந்தது. அதற்கேற்ப என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய சவால் இருந்தது. திரெளபதி கதாபாத்திரத்திற்குள் நுழையவும், பின்னர் அதிலிருந்து வெளியேறவும் மிகுந்த கடினமான ஒன்றாக இருந்தது. பொதுவாக இயக்குனர்கள் தங்கள் பட நாயகிகளை எடை குறைக்கச் சொல்வார்கள். ஆனால் இந்த படத்திற்காக குறைந்தது 5 கிலோவாவது எடை கூட்டி வாருங்கள் என்று இயக்குனர் சொன்னார். நானும் அப்படியே செய்தேன்.
வரலாற்றில் திரெளபதி கேரக்டர் எப்படி இருந்ததோ, அப்படியே கொண்டு வர முடிந்தவரை முயற்சித்திருக்கிறேன். இயக்குனருடைய தெளிவான திட்டமிடல் மூலம்தான் படத்தை இவ்வளவு குறைந்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது. பல தடைகளை தாண்டி தமிழ் வரலாற்றை பற்றிய படமாக 'திரெளபதி 2' திரையரங்குகளில் வரவிருக்கிறது. என்றார்.