பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம்
“அனுபவம் புதுமை” என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு இயக்குநராக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி, பின் சிவாஜியின் “கலாட்டா கல்யாணம்” திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, பின்னாளில் அவரது பெரும்பாலான வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட இயக்குநர் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளிவந்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம்தான் “சங்கிலி”. இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா மற்றும் ரீனா ராய் நடித்து, 1976ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற இந்தித் திரைப்படமான “காளிச்சரண்” என்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “சங்கிலி”.
இந்தத் திரைப்படம்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் புதல்வாரன இளைய திலகம் பிரபுவை ஒரு நடிகராக வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் அடையாளம் காட்டியது. நாயகனாக சிவாஜி டி எஸ் பி சரவணன் மற்றும் கொடூர சிறைக் கைதி சங்கிலி என இரட்டை வேடமேற்று நடித்திருந்த இத்திரைப்படத்தில், ராஜாளி என்ற ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ஒற்றைக் காலுடன் நடித்திருந்ததோடு, முதல் படத்திலேயே தனது தந்தையும், நடிகருமான சிவாஜியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்து, தனது சிறப்பான நடிப்பைத் தந்திருப்பார் நடிகர் பிரபு. தனது மகன் பிரபுவை ஒரு போலீஸ் அதிகாரியாக்க வேண்டும் என நினைத்திருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பிரபுவை ஒரு நடிகராக பார்க்க நேர்ந்தது எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியாகக் கூட இருந்திருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து “நீதிபதி”, “சந்திப்பு”, “சுமங்கலி”, “மிருதங்க சக்கரவர்த்தி”, “வெள்ளை ரோஜா”, “தராசு”, “திருப்பம்”, “சரித்திர நாயகன்”, “சிம்ம சொப்பனம்”, “எழுதாத சட்டங்கள்”, “இரு மேதைகள்”, “வம்ச விளக்கு”, “நாம் இருவர்”, “நீதியின் நிழல்”, “நேர்மை”, “ராஜரிஷி”, “சாதனை”, “நாங்கள்”, என பல திரைப்படங்களில் தனது தந்தையான நடிகர் திலகம் சிவாஜிகணேசனோடு இணைந்து நடித்திருந்த நடிகர் பிரபு, இறுதியாக நடிகர் திலகத்தோடு இணைந்து பணிபுரிந்த திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த “பசும்பொன்”.
இவ்வாறு தனது தந்தையின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அவரோடு பல திரைப்படங்களில் பணிபுரியும் நல் வாய்ப்பு கிடைத்து, ஏறக்குறைய 220 திரைப்படங்களுக்கும் மேல் நாயகன், குணச்சித்திரம், நகைச்சுவை என பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, 'இளைய திலகம்' என கலையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடும், மரியாதையோடும் நடிகர் பிரபுவை அழைக்க காரணமாக அமைந்த திரைப்படம்தான் இந்த “சங்கிலி”.