பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி
பொங்கலையொட்டி ஏகப்பட்ட படங்கள் வெளியாவது வாடிக்கை. ஆனால், கடந்த ஆண்டு தீபாவளியை போல பொங்கலுக்கும் குறைவான படங்களே வந்துள்ளன. இந்த ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய 3 தமிழ் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளன. ஜனவரி 10ம் தேதியே பராசக்தி வெளியாகிவிட்டதால் கடந்த 6 நாட்களில் 70 கோடி வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறை முடிவதற்குள், அதாவது வரும் ஞாயிற்றுகிழமைக்குள் இந்த படம் 100கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் டான், அமரன், மதராசி படங்கள் 100 கோடி வசூலை தாண்டின. அந்தவகையில் பராசக்தியும் 100 கோடியை தாண்டி, அவருக்கு ஹாட்ரிக் சாதனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அமரன் அளவுக்கு பெரிய வெற்றி பெறும், அமரன் சாதனையான 300கோடி வசூலை தாண்டும் என்பது நடக்காது. மதராசி வசூலை வேண்டுமானால் வருங்காலத்தில் மிஞ்சலாம். ஆகவே படம் பெரிய வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்ற நிலையில் இருக்கிறது. கடுமையான விமர்சனங்கள் பராசக்தி படத்தை பாதித்துள்ளன என்கிறார்கள் கோலிவுட்டில்.
கார்த்தியின் வா வாத்தியார் படத்துக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆனாலும் படத்தை விளம்படுத்தும் முயற்சியில் கார்த்தி இறங்கி இருக்கிறார். திருப்பூர், திருச்சி சுற்றுவட்டார தியேட்டர்களுக்கு நேரில் விசிட் அடித்து வருகிறார்.
ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில படத்துக்கு நல்ல விமர்சனம், வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும், வசூல் குறைவாக உள்ளது. இரண்டு நாளில் 10 கோடியை தொட்டாலே பெரிய விஷயம். ஆனாலும், வருங்காலத்தில் இந்த படம் நன்றாக ஓடும். காமெடி படம் என்பதால் இந்த மாதம் முழுக்க கூட ஓட வாய்ப்பு என்கிறார்கள்.
ஆக, பொங்கல் படங்களில் சூப்பர் ஹிட் எதுவும் இல்லை. இந்த மாதம் 23ம் தேதி திரெளபதி2 மற்றும்பிரியாபவானிசங்கர் நடித்த ஹாட்ஸ்பாட்2 , ஜனவரி 30ம் தேதி விஜய்சேதுபதியின் காந்தி டாக்ஸ் மற்றும் படங்கள் வர உள்ளது. அதில் எந்த படம் வெற்றி பெறபோகிறதோ என்ற மனநிலையில் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.