உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ?

'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ?

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்கு அறிமுகப்படம் வரவேற்பு கொடுத்தாலும் அவரது திறமையை நிரூபிக்க இரண்டாவது படமும் வெற்றி பெற வேண்டும். அந்த விதத்தில் 'மாநகரம்' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். அவரது இரண்டாவது படமான கார்த்தி நடித்த 'கைதி 2' படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

2019 தீபாவளிக்கு வெளிவந்த அந்தப் படத்துடன் வெளிவந்த விஜய் நடித்த 'பிகில்' படத்தின் கடும் போட்டியையும் சமாளித்து 'கைதி' படம் நன்றாக ஓடியது.

அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என்று பல சந்தர்ப்பங்களில் அந்தப் படத்தின் கதாநாயகன் கார்த்தியும், இயக்குனர் லோகேஷும் பேசினார்கள். ஆனால், அதற்கடுத்து 'மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி' என முடித்து தற்போது அல்லு அர்ஜுன் 23வது படத்தை இயக்கப் போய்விட்டார் லோகேஷ்.

பொங்கலுக்கு வெளியான கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்திற்கு நல்ல விமர்சனமும், வரவேற்பும் கிடைக்கவில்லை. அவரிடம் 'கைதி 2' படம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு “அது குறித்து லோகேஷ் தான் சொல்ல வேண்டும்,” என்று பதிலளித்துள்ளார் கார்த்தி.

கார்த்தியின் உறவினர்களான தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரபு, எஸ்ஆர் பிரகாஷ்பாபு ஆகியோர்தான் லோகேஷ் கனகராஜை 'மாநகரம்' மூலம் இயக்குனராக அறிமுகம் செய்து அடுத்து இரண்டாவது படமான 'கைதி' வாய்ப்பையும் கொடுத்தனர்.

இப்போது, 'கைதி 2' பற்றி லோகேஷ் தான் சொல்ல வேண்டும் என கார்த்தியே கூறியிருப்பது அவருடைய வருத்தத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. கார்த்திக்கு மட்டுமல்ல, 'கைதி 2'வை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும், 'எல்சியு' ரசிகர்களுக்கும் ஏதாவது பதில் சொல்வாரா லோகேஷ் ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !