பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்…
2026ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் ஜனவரி 10ல் 'பராசக்தி', ஜனவரி 14ல் 'வா வாத்தியார்', ஜனவரி 15ல், 'தலைவர் தம்பி தலைமையில்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின.
தணிக்கை விவகாரம், விஜய் ரசிகர்களின் எதிர்ப்பு என சிக்கித் தடுமாறிய 'பராசக்தி' படம் 80 கோடி வசூலை நெருங்கியிருக்கலாம் எனத் தகவல். 'வா வாத்தியார்' படத்திற்கு மிக மோசமான வரவேற்புதான் கிடைத்துள்ளது. மொத்தமாக 10 கோடியைக் கூடக் கடக்கவில்லை என்ற ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிகரமான தகவலை தருகிறார்கள். அதேசமயம் 'தலைவர் தம்பி தலைமையில்' படம் 20 கோடி வசூலை நெருங்கியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
பொங்கல் விடுமுறை நேற்றோடு முடிந்து இன்று அலுவலகம், பள்ளி, கல்லூரி என மக்கள் வழக்கமான பணிகளில் பிஸியாகிவிட்டார்கள். இன்றைய ஆன்லைன் முன்பதிவைப் பார்த்தால் பொங்கல் படங்களின் முன்பதிவு நிலவரம், கலவரமாகவே உள்ளது.
பகல் காட்சிகளுக்குப் பல தியேட்டர்களில் 20 டிக்கெட்டுகள் கூட முன்பதிவு செய்யப்படவில்லை. மாலை காட்சிகள், இரவுக் காட்சிகளுக்காவது நடந்திருக்குமா என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இளம் ரசிகர்கள் யாராவது நேரம் ஒதுக்கி படம் பார்க்க வந்தால்தான் பல தியேட்டர்களில் காட்சிகள் நடக்கும் சூழல் உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை ஜனவரி 23ம் தேதி சில படங்கள் வர உள்ளது. இதனால், பொங்கலுக்கு வெளியான படங்களின் தியேட்டர்கள் குறையவும் வாய்ப்புள்ளது. இந்த வார இறுதிக்குள் பொங்கல் படங்களின் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது தெரிந்துவிடும்.