பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா
நாடகம், சினிமாவில் கதாநாயகன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் எம்.கே. ராதா. அவர் வில்லனாக நடிப்பதில்லை என்று முடிவு செய்து மிக மிக நல்ல மனிதர்களின் கேரக்டரிலேயே நடித்தார். 'சதிலீலாவதி, அபூர்வ சகோதரர்கள், வனமோகினி' போன்றவை அவர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.
அவர் வில்லனாக நடித்த ஒரே படம் 'அன்பே தெய்வம்'. இந்தப் படத்தை ஆர்.நாகேந்திர ராவ் இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். அவரது மகன் ஆர்.என். ஜெயகோபால் கதை திரைக்கதை எழுதியிருந்தார். மற்றொரு மகனான ஆர்.என்.கே. பிரசாத், ஒளிப்பதிவு செய்து இருந்தார் இந்த படத்தின் ஒளிப்பதிவு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
எம்.கே. ராதா, வில்லனாக நடிக்க அவருடன் சி.வி.வி. பந்துலு, கே. சாரங்கபாணி, வி. கோபாலகிருஷ்ணன், கணபதி பட், பி.டி. சம்பந்தம், ஸ்ரீரஞ்சனி ஜூனியர், என்.ஆர். சந்தியா, சூர்யகலா, கே.எஸ். அங்கமுத்து, 'பேபி' உமா, டி. இ. கிருஷ்ணமாச்சாரி, 'பொட்டை' கிருஷ்ணமூர்த்தி, இ. வி. சரோஜா, தங்கப்பன், கங்கா மற்றும் மாதவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
சினிமா இயக்குனரான ஆர் ராஜேந்திரராவை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பார் எம் கே ராதா. அவரின் சதி திட்டத்தில் எம் கே ராதா ஒருவரை கொன்று விடுவார். இதனால் சிறைக்குச் செல்லும் எம்.கே ராதாவின் மகளை ஆர். நாகேந்திரராவே எடுத்து வளர்ப்பார். வளர்த்த மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் நிலையில் சிறையிலிருந்து விடுதலாகி வருவார் எம்.கே. ராதா அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தில் கதை.