பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை
1987ம் ஆண்டு கமல் நடிப்பில் சீனிவாச ராவ் இயக்கிய 'பேசும் படம்' இந்திய சினிமாவில் ஒரு மைல்கல். இதற்குக் காரணம் பேசும் படங்கள் உருவாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு பேசாத படமாக இது உருவாகி இருந்தது. வசனம் தான் ஒரு படத்தின் உயிர் நாடி என்பார்கள். அந்த வசனமே இல்லாமல் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்ததாகும், அதனை செய்து முடித்தார் சீனிவாச ராவ்.
சீனிவாச ராவ், கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு காட்சி படமாக்கப்பட்டது. வசனமே இல்லாமல் ஒரு கேரக்டர் பயத்தை வெளிக்காட்ட வேண்டும். இது சீனிவாச ராவின் மனதில் ஆழமாகப் பதிந்து விதையாக மாறியது. ஒரு காட்சி வசனமே இல்லாமல் படம் ஆகும்போது ஏன் ஒரு திரைப்படத்தை வசனம் இல்லாமல் இயக்க முடியாது என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாக பதிந்தது.
இப்படியான முயற்சிக்கு அழுத்தமான ஆழமான கதை வேண்டும் அதை வசனமே இல்லாமல் நடிப்பதற்கு ஒரு நடிகர் மட்டுமல்ல முழு படத்தில் நடிப்பவர்களுமே அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று யோசித்தார். ஒரு சின்ன காதல் அதற்குள் ஒரு கிரைம் திரில்லர் என்று திரைக்கதையை வடிவமைத்தார். அதன் பிறகு எழுத அமர்ந்து இரண்டே வாரத்தில் முடித்த திரைக்கதைதான் 'பேசும் படம்'.
கன்னடத்தில் 'புஷ்பக விமானா', தெலுங்கில் 'புஷ்பக விமானம்', இந்தியில் 'புஷ்பக்', தமிழில் 'பேசும் படம்' என்று வெவ்வேறு தலைப்புகள் சூட்டப்பட்டன. இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகக் கணிசமான பாராட்டுகள் கிடைத்ததோடு, வர்த்தக ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. பெங்களூரில் 35 வாரங்களுக்கும் மேல் திரையிடப்பட்டது. 35 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அந்த காலத்திலேயே இரண்டு கோடி ரூபாய் வரை வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் லாபமாக கொடுத்தது. 'சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்' என்கிற பிரிவில் தேசிய விருதும் பெற்றது.