உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர்

மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர்


மலையாள திரை உலகில் 2016 காலகட்டத்தில் தொடர் தோல்விகளால் நடிகர் பஹத் பாசில், சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தான் இயக்கிய 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற படத்தின் வெற்றி மூலம் அவரது மார்க்கெட்டை இழுத்துப் பிடித்து நிலை நிறுத்தியவர் இயக்குனர் திலீஷ் போத்தன்.

அதனைத் தொடர்ந்து பஹத் பாசிலை வைத்தே 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' மற்றும் 'ஜோஜி' என மூன்று படங்களை மட்டுமே அவர் இயக்கியுள்ளார். அதன் பிறகு படங்களை இயக்க நேரமில்லாத அளவிற்கு பிசியான நடிகராக மாறி வருடத்திற்கு 10 படங்களுக்கு குறைவில்லாமல் நடித்து வருகிறார் திலீஷ் போத்தன். இடையில் தயாரிப்பாளராக மாறி 'கும்பலாங்கி நைட்ஸ், தங்கம், பிரேமலு' உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்புகிறார் திலீஷ் போத்தன். இந்த முறை அவர் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மகேஷிண்டே பிரதிகாரம் படத்திலிருந்து இவருக்கு பக்கபலமாக இருந்து வரும் கதாசிரியர்கள் ஷியாம்-புஷ்கரன் இருவரும் தான் இந்த படத்திற்கும் கதை எழுதுகிறார்கள். மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் சார்பாக ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே 'நீராளி, டிராமா' உள்ளிட்ட ஒரு சில படங்களில் மோகன்லாலுடன் திலீஷ் போத்தன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !