ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2024ல் வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. சுமார் 1800 கோடி வரை வசூலித்த இந்தப் படம் கடந்த வாரம் ஜனவரி 16ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியானது.
இதற்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இருவரும் ஜப்பான் சென்று படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 15ம் தேதி படத்தின் பிரிமியர் காட்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், ஜப்பான் மொழியிலும் சில வார்த்தைகளைப் பேசி ரசிகர்களைக் கவர்ந்தார். படத்திற்கான ஜப்பான் மொழி டிரைலரையும் வெளியிட்டார்கள்.
சுமார் 200 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. இருந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் சுமார் 50 லட்சம் மட்டுமே வசூலித்ததாம். அதற்கடுத்த நாட்களிலும் வசூல் பெரிய அளவில் இல்லை என்கிறார்கள். இதற்கு முன்பு வெளியான சில இந்தியத் திரைப்படங்களின் வசூலை விட இது மிகவும் குறைவாம்.
படத்தின் புரமோஷனுக்காக அவ்வளவு தூரம் சென்ற அல்லு அர்ஜுனுக்கும், ராஷ்மிகாவுக்கும் இது ஏமாற்றமாக இருக்கலாம்.