பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள்
ஒரே படத்தில் இரண்டு கதைகள் அமைவது அபூர்வமான விஷயம். இரண்டு கதைகளும் ஒரே மாதிரியாக இருப்பது இன்னும் அபூர்வமானது. அப்படியான ஒரு படம் 'பாக்கியவதி'.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஏ. தங்கவேலு, எம்.என்.ராஜம், ராகினி, கே.சாரங்கபாணி, லட்சுமிபிரபா, கே.என்.கமலம், கே.அரங்கநாயகி, 'மாஸ்டர்' கோபால், சி.பி. கிட்டன், வி.பி.எஸ்.மணி, எம்.ஆர்.சந்தானம், வி.டி.கல்யாணம், சீதாலட்சுமி, ஜி.வி. சர்மா, பொன்னுசாமி, நாஞ்சில் சைட், பசுபதி, பி.ஆர்.சந்திரா, வி.பி. பலராமன், சிவசூரியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படத்தில் சிவாஜி கணேசன் ஒரு குற்றவாளி அவர் தனது குற்றத்தை மறைத்து பத்மினியை திருமணம் செய்து கொள்வார். திருமணத்துக்குப் பிறகு தனது கணவன் ஒரு குற்றவாளி என்பதை அறியும் பத்மினி அவரை திருத்துவது ஒரு கதை.
ஆறு வயது சிறுவனான 'மாஸ்டர்' கோபால் தன் தந்தை சுப்பண்ணா ஒரு குற்றவாளி என்பதை அறிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். சுப்பண்ணாவின் மகள் எம் என் ராஜம் அவரை திருத்த முயற்சி எடுத்து தோல்வி அடைந்து அதனால் தற்கொலை செய்து கொள்கிறார். இது இன்னொரு கதை.
இரண்டு கதைகளுமே இரு குற்றவாளி சுற்றி நடக்கிறது ஒரு குற்றவாளி திருத்தப்படுவதும், திருந்தாத ஒரு குற்றவாளியால் ஏற்படும் பிரச்சனைகளும் கதைகளின் கரு. இந்தத் திரைப்படத்தை, எல்.வி. பிரசாத் இயக்கியிருந்தார்.
வங்கிக் குமாஸ்தாவிலிருந்து திரைப்படத் தயாரிப்பாளராக மாறிய ஏ.சி. பிள்ளை இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தார். இப்படத்திற்கு 'ரா. வே.கதை எழுதியிருந்தார். பி.எல். ராய் ஒளிப்பதிவு செய்தார். தட்சிணாமூர்த்தி இசையமைத்தார்.