தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி
தெலுங்குத் திரையுலகத்தில் பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்தப் படங்களுக்குக் குறிப்பிட்ட நாட்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வை ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.
படம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை மனு அளித்த பின் அதற்குரிய அரசு ஆணைகளை மாநில அரசுகள் பிறப்பிக்கும். படம் வெளியான நாளிலிருந்து சுமார் ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி அறிவிப்புகள் இருக்கும். அதன் மூலம் தயாரிப்பாளர்கள் பலனடைவர்.
கடந்த சில மாதங்களாக இப்படியான டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலங்கானா மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சிக்கலை ஏற்படுத்தியது. பவன் கல்யாண் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'ஓஜி' படத்தை எதிர்த்து ஒருவர் தொடர்ந்த வழக்கால் டிக்கெட் கட்டண உயர்வு அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது.
சங்கராந்தியை முன்னிட்டு வெளிவந்த சிரஞ்சீவி நடித்த 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்திற்கு தெலங்கானா மாநில அரசு டிக்கெட் கட்டண உயர்வு அரசாணையை வெளியிட்டது. அதே சமயம் 'தி ராஜா சாப்' படத்திற்கு வெளியிட்ட அரசாணையை நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்தது. சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'மன ஷங்கர் வரபிரசாத் காரு' படத்திற்கு வழங்கப்பட்ட டிக்கெட் கட்டண உயர்வு அரசாணை மீது தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இனி ஒரு படத்தின் வெளியீட்டிற்கு 90 நாட்கள் முன்பாகத்தான் டிக்கெட் கட்டண உயர்வு குறித்த அரசாணையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், 'தி ராஜா சாப்' டிக்கெட் கட்டணம் குறித்த வழக்கு மற்றும் டிக்கெட் கட்டண உயர்வு குறித்த வழக்குகளை பிப்ரவரி 3ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்தார்.
90 நாட்களுக்கு முன்பாக அரசாணை என்று வந்தால், ஏப்ரல் 19க்கு முன்பாக வெளியாகும் படங்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை. மார்ச் 26 வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நானியின் 'த பாரடைஸ்', மார்ச் 27ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள ராம் சரணின் 'பெத்தி' ஆகிய படங்கள் இதனால் பாதிக்கப்படும்.