'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ?
இந்தியத் திரையுலகத்தின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். இப்போதும் அவருடைய பாடல்கள் பல டிவி நிகழ்ச்சிகளில் இன்றைய இளம் சிறார்கள் முதல் பாடப்பட்டு வருகிறது. காலத்தைக் கடந்தும் பலரது கவலைகளை மறக்கும் இசையாக அவரது இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சாதனையாளரின் பயோபிக் படத்தை உருவாக்கப் போவதாக 2024ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிவித்தார்கள். இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கப் போவதாக படத்தின் போஸ்டர்களுடன் அறிவிப்பு வந்தது. இளையராஜா ரசிகர்கள் மட்டுமல்லாது இசை ரசிகர்கள் பலருக்கும் அது மகிழ்வைத் தந்தது.
அந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர்கள் கங்கை அமரன், பாரதிராஜா, வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆனால், அதன்பின் அந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகவில்லை.
கமல்ஹாசன் தான் அப்படத்திற்குத் திரைக்கதை எழுவதுவதாகச் சொன்னார்கள். படத்தைத் தயாரிக்க முன் வந்த நிறுவனம் ஏதோ காரணங்களால் விலகியதாகச் சொன்னார்கள். 2024ம் ஆண்டில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம், 2026ம் ஆண்டே வந்துவிட்டது, இதுவரை ஆரம்பிக்கவில்லை.
'இளையராஜா' பயோபிக்கில் நடிப்பதாகச் சொல்லப்பட்ட தனுஷ், அடுத்தடுத்து வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'கர' படத்தில் நடித்து முடிக்க உள்ளார். அடுத்து அவரது 55வது படத்தில் நடிக்கப் போகிறார். அடுத்தும் வேறு சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல். ஆனால், 'இளையராஜா' பயோபிக் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
இளையராஜா மீது பெரும் பற்று கொண்டவர்கள் இணைந்து கலந்து கொண்ட படத்தின் ஆரம்ப விழா இரண்டு வருடங்களாக ஆரம்பமாகாமல் ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போகிறது. ஒரு மாபெரும் இசைக் கலைஞனின் பயோபிக் படத்தை அறிவித்துவிட்டு இப்படி இழுத்துக் கொண்டே செல்வது சரியில்லையே. படம் சம்பந்தப்பட்டவர்கள் கூடிப் பேசி படத்தை சீக்கிரம் ஆரம்பிக்கும் பணிகளை மேற்கொள்வார்களா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த 2026ம் ஆண்டிலாவது அது நடக்குமா ?.