உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்?

'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்?

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கான நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஜனவரி 20ம் தேதி நடைபெற்ற விசாரணையில் தயாரிப்பு நிறுவனத் தரப்பும், தணிக்கை வாரியத் தரப்பும் அவர்களது வாதங்களை முன் வைத்தன. அவற்றைக் கேட்ட நீதிமன்ற அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பைத் தள்ளி வைத்தது.

தீர்ப்பு எப்படி வரலாம் என்ற யூகங்கள் அடிப்படையில் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள். தணிக்கை வாரியம் சொன்னபடி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கான நடைமுறைகள் முடிய அதிகபட்சம் 20 நாட்கள் வரை ஆகலாம். ஒருவேளை அவற்றை விரைந்து முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புகள் உள்ளது. அதற்கான கால வரையறை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யலாம்.

தணிக்கை வாரியம் குறிப்பிடும் விதிகளை மையப்படுத்தியே நீதிமன்ற உத்தரவு இருக்கலாம். சினிமாட்டோகிராபி சட்டம் 1952, சினிமாட்டோகிராபி (சான்றிதழ்) விதிகள் 2024, உள்ளிட்ட 11 வழிகாட்டுதல் முறைகளை வைத்துதான் ஒரு படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவை என்னென்ன என்பது தணிக்கை வாரிய இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஜனநாயகன்' படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சான்றிதழ் வழங்க பரிந்துரைதான் செய்ய முடியும். சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தணிக்கை வாரியத் தலைவருக்குத்தான் இருக்கிறது. எனவே, தயாரிப்பு நிறுவனம் வாதிட்டபடி 'யு/ஏ' சான்றிதழ் வழங்குவதாகச் சொன்னார்கள் என்பது பரிந்துரையாக மட்டுமே பார்க்கப்படும்.

மேலும், இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்ற அமர்வு, தணிக்கை சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்ற நடைமுறைகளை ஒரேநாளில் முடித்து அன்றே தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றித்தான் உத்தரவு தர முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது தணிக்கை வாரிய வழிகாட்டு முறைப்படி 'ஜனநாயகன்' படத்திற்கு சான்றிதழ் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிடவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுவரை தயாரிப்பு நிறுவனம் பொறுமையாகக் காத்திருந்து சான்றிதழ் பெற்ற பிறகே படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியும். அதுவரை விஜய் தற்போது எப்படி அமைதியாக உள்ளாரோ, அது போல அவரது ரசிகர்களும் அமைதியாகக் காத்திருக்கத்தான் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !