விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம்
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இளம் நாயகனாக விஜய் தேவரகொண்டா, கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இருவரும் அடுத்த மாதம் பிப்ரவர் 26ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் பரவி வருகின்றன.
சில சினிமா நிகழ்ச்சிகளில் தனது காதல் குறித்து மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா. ஆனால், திருமணம் குறித்து அவரும் சரி, விஜய் தேவரகொண்டாவும் சரி இதுவரை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
ஆனால், தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பழங்கால அரண்மனை ஒன்றில் நடைபெற உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. திருமண அலங்காரங்களுக்கான வேலைகளை இரு வீட்டாரும் ஆரம்பித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்காக 'டச் ரோஜாக்கள்' ஆர்டர் செய்துள்ளார்களாம். நெதர்லாந்து நாட்டில் பூக்கும் ரோஜாக்கள்தான் 'டச் ரோஜாக்கள்'. ஒரு மாதம் முன்னதாக ஆர்டர் கொடுத்தால்தான் அவை கிடைக்குமாம்.
கூடிய விரைவில் இருவரும் தங்களது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.