பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால்
கமல் நடித்த நாயகன் படத்தில் அவரது மகளாக நடித்தவர் கார்த்திகா. 1985 முதல் 1990 வரை குறுகிய காலம் வரை மட்டுமே சினிமாவில் நடித்த இவர் தமிழில் நாயகன் மற்றும் பூவிழி வாசலிலே என்கிற இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த வகையில் அவர் 1987ல் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார். அந்த வருடத்தில் அவரது நடிப்பில் மோகன்லால் உடன் அவர் நடித்த ஜனவரி ஒரு ஓர்ம திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஜோஷி இயக்கியிருந்தார். பிரபல கதாசிரியர் கல்லூர் டென்னிஸ் இந்த படத்திற்கு கதை எழுதியிருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. மோகன்லால் ஒரு குறும்புத்தனம் மிக்க டூரிஸ்ட் கைடு இளைஞனாகவும், கார்த்திகா குடும்பத்துடன் ஊட்டியை சுற்றி பார்க்க வந்த இளம் பெண்ணாகவும் நடித்திருந்தனர். அப்போது சூசைட் பாயிண்ட்டில் இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சியை பலமாக்கினார்கள். அங்கே நல்ல பனி மூட்டம் காணப்பட்டது. அப்போது சூசைட் பாயிண்ட் நோக்கி கார்த்திகா செல்வது போலவும் அவரிடம் கிண்டல் செய்து பேசிக்கொண்டே மோகன்லால் உடன் செல்வது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அந்த சமயத்தில் பனிமூட்டமாக இருந்தால் திடீரென கால் ஸ்லிப் ஆகி கார்த்திகா நழுவி மலை விளிம்பை நோக்கி நழுவ தொடங்கினார். உடனடியாக மோகன்லால் சுதாரித்து அவரது கையை இறுகப் பிடித்து பின்பக்கமாக இழுத்து அவரை காப்பாற்றினார். தூரத்திலிருந்து பார்த்த படக்குழுவினர் அனைவரும் அந்த காட்சி சூப்பராக வந்தது குறித்து கைதட்டி பாராட்டினார்கள். ஆனால் அதை அருகில் இருந்து பார்த்த கதாசிரியர் கல்லூர் டென்னிஸ் ரொம்பவே பதறிப் போய்விட்டார். அந்த பனி மூட்டத்திலும் கார்த்திகா அப்படி ஸ்லிப் ஆகி நழுவி விழுவதை வேகமாக கவனித்து மோகன்லால் செயலாற்றியதால் தான் அன்று கார்த்திகா உயிர் பிழைத்தார். இல்லை என்றால் நினைப்பதற்கே நெஞ்சம் பதறுகிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கதாசிரியர் கல்லூர் டென்னிஸ்.