உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி

ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி

மம்முட்டி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் களம் காவல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டி வில்லன் ஆகவும், வில்லன் நடிகர் விநாயகன் கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பெண்களை ஏமாற்றி அவர்களை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். இந்த படத்தில் கிட்டத்தட்ட 22 பெண்கள் கதை நாயகிகளாக நடித்திருந்தனர். அவர்களில் மம்முட்டியின் மனைவியாக நடித்திருந்தார் சீமா சிந்து கிருஷ்ணன்.

இவர் அடிப்படையில் நடிகை அல்ல. கேரள பல்கலைக்கழகத்தில் ஒரு துறையில் உதவி செக்சன் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் டிக்டாக் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு ஓரளவு பிரபலமானார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவற்றில் இவர் பேசிய திருவனந்தபுரம் பாஷை ரொம்பவே வித்தியாசமாக இருந்ததால் களம் காவல் படத்தின் இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் மம்முட்டியின் மனைவி கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தார்..

மம்முட்டியுடன் நடிக்கப் போகிறோமே என்கிற பதட்டத்தில் சென்ற இவரிடம், “நீங்கள் கல்லூரியில் பணி புரிவது எனக்கு தெரியும். உங்கள் ரீல்ஸ் வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறி அவரது டென்ஷனை குறைத்து இயல்பாக நடிக்க உதவி செய்தாராம் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த மகிழ்ச்சி இருந்தாலும் படத்தில் கொஞ்சம் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதால் வெளியில் சென்றாலும் கூட தன்னை பலரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்பது மட்டும் இவரது மனக்குறையாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !