ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்?
விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பிரச்னையால் வெளியாகாமல் உள்ளது. இதுதொடர்பான வழக்கில் கோர்ட் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளதால், அடுத்து என்ன நடக்கப்போகிறது? படம் எப்போது வெளியாகுமோ என அவருடைய ரசிகர்கள் தவித்து வருகிறார்கள். இதுவரை ஜனநாயகன் சர்ச்சை, சென்சார் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. ஒரு அறிக்கை கூட விடவில்லை. இனியும் மவுனம் காப்பது சரியில்லை. படம் லேட்டாக வருவதற்காக அவர் ரசிகர்கள், வினியோகஸ்கர்கள், தியேட்டர் அதிபர்களிடம் வருத்தம் தெரிவிக்கலாம் அல்லது ஜனநாயகன் பிரச்னை குறித்து ஒரு வீடியோ வெளியிடலாம். அல்லது விளக்க அறிக்கையாவது வெளியிடலாம். எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல என கடும் விமர்சனங்கள் வருகின்றன. ஜனநாயகன் சர்ச்சை குறித்து படத்தின் தயாரிப்பாளர் முன்பே ஒரு வீடியோ வெளியிட்டு விட்டார். அந்தவகையில் விஜயும் பேச வேண்டும். இல்லாவிட்டால், அவரின் பல விஷயங்கள் கேள்விகளாக எழுப்பப்படும். எப்போது வாயை திறப்பார் விஜய், அவருக்கு என்ன தயக்கம் என அடுக்கடுக்கான கேள்வியை கோலிவுட்டில் எழுப்புகிறார்கள்.