சூரி சொன்ன 'மண்டாடி' கதை
சூரி தற்போது நடித்து வரும் படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தைப் பற்றி சூரி கூறி இருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு தான் படகு போட்டி. மீனவ மக்களின் பண்பாட்டு அடையாளமாகவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அங்கே எந்த ஒரு விழாவா இருந்தாலும் ஹைலைட்டா இந்த படகுப் போட்டியை நடத்துவாங்க. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெறுகிறது. 150-லிருந்து 200 படகுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், 20 கடல் மைல் தொலைவுல பாய்மரப் படகுகள்ல ரேஸ்கள் நடக்கும். நடுக்கடல்ல 20 மைல்களுக்கு அப்பால கொடியோட சில எல்லைப் படகுகளை நிறுத்தி வெச்சிருப்பாங்க.
நம்ம படகு அந்த எல்லைப் படகைப் போய் சுத்திட்டு, திரும்பவும் கரைக்கு வர்றதை ஊரே கூடி நின்னு கொண்டாடும். மூணு மணி நேரத்துக்கு மேல நடக்கும் இந்தப் போட்டி சாதாரணமானது கிடையாது. திரும்பி வரும்போது நாம உசுரோட வரணும். ஏன்னா, பல போட்டுகள் கடல்ல கவுந்துடும். இல்லைன்னா, பாதிப் பேருக்கு காயம் ஏற்பட்டுரும். சுருக்கமா சொன்னா இது மனுஷனுக்கும் இயற்கைக்கும் நடக்குற போட்டினுகூடச் சொல்லலாம். இந்த ரேஸ்ல மனிதனோட சூழ்ச்சியையும் வெல்லணும். அதே சமயத்துல கடல்ல அடிக்கும் காற்றையும் வெல்லணும். இப்படிச் சவால்கள் நிறைஞ்சதுதான் இந்தப் போட்டி.
ஒரு அணியில் ஆறு பேர் இடம் பெறுவார்கள். இந்த அணியின் கேப்டன் தான் மண்டாடி என்று அழைக்கப்படுபவர் கேப்டன்தான் கடலின் நீர் வாடையைச் சரியா கணிக்க முடியும். அடிக்கும் காத்துல, படகை எந்தத் திசையில செலுத்தணும்னு எல்லாம் தெரிஞ்சவர் படகோட கேப்டன். படகுப் போட்டியில் ஈடுபடும் மீனவர்கள், அவங்களோட வாழ்க்கை, போராட்டம், ஈடு இணையில்லா அன்பு, போட்டினு எல்லாத்தையும் சொல்லும் படமாக 'மண்டாடி' உருவாகி வருகிறது.
இவ்வாறு சூரி கூறியுள்ளார்.