லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு
வெற்றி, பிரிகிடா, இளவரசு, லொள்ளுசபா மாறன் உட்பட பலர் நடித்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைடைந்துள்ளது. இதை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இவர் வரலட்சுமி நடித்த கொன்றால் பாவம் படத்தை இயக்கியவர், பல கன்னட படங்களை இயக்கியவர். கவிதா பாரதியும், இவரும் இணைந்து திரைக்கதை எழுத, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இது சமூகப்பொறுப்புள்ள அழுத்தமான படம் என்று படக்குழு கூறுகிறது.
மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கை இந்த கதை பேசுகிறதா? இல்லை, வேறுவகை கதைகளமா என்று அவர்கள் தெளிவுப்படுத்தவில்லை. துல்கர் சல்மான் நடித்த காந்தா படம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட கதை என்று தகவல் பரவியது. ஆனால், படம் வெளியானபோது அது வேறு, இது வேறு என பார்வையாளர்கள் புரிந்து கொண்டனர்.
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பவர் கொலை செய்யப்பட, அந்த வழக்கில் அப்போதைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பல மாதம் சிறை வாசம் அனுபவித்து பின்னர் விடுதலை ஆனார்கள். சினிமாகாரர்கள் குறித்து ஆபாசமாக, தவறாக எழுதியதால் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது.