சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தான் நடித்த படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் அறிமுகமான 'பிரேமம்', தெலுங்கில் அறிமுகமான 'பிடா', தமிழில் 'கார்கி, அமரன்' உள்ளிட்ட படங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று.
தற்போது ஹிந்தியில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக 'ஏக் தின்' படத்திலும், 'ராமாயணா' படத்திலும் நடித்து வருகிறார். 'ஏக் தின்' படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. படத்தில் சாய் பல்லவியே ஹிந்தியில் பேசி டப்பிங் செய்துள்ளாராம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த கேள்விக்கு அமீர்கான் பதிலளிக்கையில், “இது ஒரு தூய்மையான, கிளாசிக்கான காதல் படம். நான் விரும்பும் வகையான ஒரு காதல் இது. ஒரு பார்வையாளராக, நான் இனிமையான காதல் படங்களுக்கு அடிமை. நான் இனிமையான காதலை விரும்புகிறேன். கொஞ்சம் மேஜிக்கல் காதல் கதையும் கூட. முதல் முறை கேட்டபோது கதையை அவ்வளவு நேசித்தேன். இறுதியாக சாய் பல்லவியைக் கதாநாயகியாக தேர்வு செய்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் மிகச் சிறந்த நடிகை, அற்புதமாக நடித்துள்ளார். ஜுனைத்தும் சிறப்பாக நடித்திருக்கிறார். என் மகன் என்பதால் அதிகம் பேசக் கூடாது. இருவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். இயக்குனர் ஒரு அற்புதமான படத்தை உருவாக்கியிருக்கிறார். மே 1ம் தேதி வெளியாகும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று பாராட்டியிருக்கிறார்.