சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்'
'தமிழ்ப் படம் 1, 2' காதலில் சொதப்புவது எப்படி, இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம், தலைக்கூத்தல், டெஸ்ட்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த நிறுவனம் ஒய் நாட் ஸ்டுடியோஸ். இதில் 'மண்டேலா' படம் சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனம் ஆகிய இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.
தேசிய விருதுகளை வென்ற ஒரு முன்னணி நிறுவனம் ஒரு சிறிய நடிகருக்கு, அவர்களது படத்தில் நடித்தற்கான சம்பளத்தை முழுமையாகத் தராமல் பாக்கி வைத்துள்ளது. தனியார் டிவியில் பல வருடங்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் விஜயசாரதி. அந்தக் கால நடிகர் மறைந்த சசிகுமார் மகன். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் வெளிவந்த 'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் விஜயசாரதி. அவர் நேற்று எக்ஸ் தளத்தில், “டியர் சஷிகாந்த் சார், அனைத்தும் நன்றாக நடக்கிறது என எதிர்பார்க்கிறேன். 'சிற்றூர் டேஸ்'-ல் நடித்துள்ளேன். அதற்கான டப்பிங் பேச வேண்டும். உங்கள் நிர்வாகத் தயாரிப்பாளர் மிஸ்டர் பிரகாஷைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது போனையும் அவர் எடுப்பதில்லை. எனக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையைத் தருவதற்காக யாரையாவது ஒருவரை என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். சோஷியல் மீடியாவில் இதைக் கேட்பதற்கு மன்னிக்க” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவிற்கு அவர் இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மூன்று மாதங்களாக ஒய் நாட்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சஷிகாந்த் எக்ஸ் தளத்தில் எந்தப் பதிவும் போடவில்லை.