உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான்

பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான்

1980களில் இயக்குநர் கனவுடன் மதுரையிலிருந்து புறப்பட்டவர்களில் இளவரசுவும் ஒருவர். பாரதிராஜா இயக்கிய படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். இயக்குனராக வேண்டும் என்று சினிமாவுக்கு வந்தவர் ஒளிப்பதிவாளரானால் போதும் என்ற முடிவுக்கு வந்தார்.

இயக்குனர் பாரதிராஜா, பட யூனிட்டில் தனக்கு பிடித்தவர்களுக்கு ஏதாவது ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த இளவரசுக்கு 'வேதம் புதிது' படத்தில் சத்யராஜ் நடித்த பாலு தேவர் கதாபாத்திரத்தைச் சொத்துக்கு ஆசைப்பட்டுக் கொல்லும் வேடம் ஒன்று இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஆள் வராமல் போகவே, அந்த வாய்ப்பு இளவரசுவுக்கு கிடைத்தது. இரண்டு வசனம் பேசி இளவரசு நடித்தார்.

இளவரசு நடிப்பு நன்றாக இருந்ததால் மேலும் சில காட்சிகளை சேர்த்தார். ஆனால் தணிக்கை குழுவால் இளவரசு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. என்றாலும் இளவரசுக்கு நடிப்பு ஆசை வந்தது. கண்ணனிடமிருந்து பிரிந்து 17 படங்கள் வரை ஒளிப்பதிவு செய்தாலும் நடிப்பிலேயே தீவிரம் கட்டினார். தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக விளங்கும் இளவரசு 200 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !