ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார்
மலையாள திரையுலகில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் கமல் ராய். இவர் நடிகைகளான ஊர்வசி, கல்பனா மற்றும் கலாரஞ்சனி ஆகியோரின் உடன்பிறந்த சகோதரர். சென்னையில் வசித்துவந்த 54 வயதான கமல் ராய், நேற்று ஹார்ட் அட்டாக் காரணமாக காலமானார்.
'யுவஜனோல்சவம், அந்தப்புரம், கிங்கினி, லீடர், தி கிங் மேக்கர் மற்றும் கல்யாண சவுகந்திகம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், வினயன் இயக்கிய 'கல்யாண சவுந்திகம்' படத்தில் திலீப்புக்கு வில்லனாக நடித்ததன் மூலம் ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமானார்.
சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்து வந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் கமல் ராயின் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.. இவரது சகோதரி கல்பனா பத்து வருடங்களுக்கு முன்பே இதேபோல கடந்த 2016 ஜனவரி மாதம் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.