பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன்
ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடியவைகளில் ஒன்று அத்திரைப்படத்திற்கான பாடல்கள் என்பது திரையிசைப் பிரியர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி என ஆரம்பித்து, இன்றைய இளம் கவிஞர்கள் உட்பட, மனதிற்கு நெருக்கமான, நல்ல கருத்தாழமிக்க பாடல்களைத் தந்து, நம் கவனங்களை ஈர்த்திருந்த கவிஞர்களும், ஈர்த்து வரும் கவிஞர் பெருமக்களும் நம் தமிழ் திரையுலகில் ஏராளம்! ஏராளம்!!
அப்படிப்பட்ட கவிஞர்களின் அற்புத படைப்புகளில், அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி கேட்டு மகிழும் பல பாடல்கள், நம் சிந்தைக்கும் செவிக்கும் விருந்தளிப்பவையாக இருந்து வந்தாலும், அப்பாடல்களை எல்லாம் யார் எழுதியது என்ற கவனமேயின்றி கேட்டு மகிழ்ந்து, பின்னொரு நாளில் அந்தப் பாடல்களை எல்லாம் இவரா எழுதியது? என தெரிய வரும்போது, அவரைப் பற்றி, அவரது மற்ற படைப்புகளைப் பற்றிய தேடுதலுக்கான உந்துதலுக்கு நாம் உள்ளாவோம். அப்படி நமக்கு மிக நெருக்கமான, நம் செவிகளுக்கு இனிமையான பல பாடல்களைத் தந்து சென்ற ஒரு அற்புதமான கவிஞரைப் பற்றித்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
சிறந்த கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்திற்கு ஒரு உதாரணத் திரைப்படமாக நம்மால் பார்க்கப்படும் திரைப்படம்தான் இயக்குநர் கே பாக்யராஜின் “அந்த 7 நாட்கள்”. 1981ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குநர் கே பாக்யராஜால் ஒரு பாடலாசிரியராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம். இந்தப் படத்தில் “கவிதை அரங்கேறும் நேரம், மலர்க் கனைகள் பரிமாறும் தேகம்” என்ற தனது அழகிய கவிதை ஒன்றை அரங்கேற்றி, கலையுலகில் ஒரு கவிஞராக களம் கண்டார்.
அடுத்து வந்த கே பாக்யராஜின் “டார்லிங் டார்லிங் டார்லிங்” திரைப்படத்தில் இடம் பெற்ற “ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்”, “தாவணிக் கனவுகள்” திரைப்படத்தில் இடம் பெற்ற “செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது”, இவை தவிர, “சுகராகமே சுகபோகமே” என்ற “கன்னிராசி” திரைப்படப் பாடல், “ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம்” என்ற “கரையெல்லாம் செண்பகப்பூ” படப்பாடல், “குயிலே குயிலே பூங்குயிலே, மயிலே மயிலே மாமயிலே” என்ற “ஆண்பாவம்” படப்பாடல், “மாலை பொன்னான மாலை, இளம் பூவே நீ வந்த வேளை” என்ற “நிலவே மலரே” படப்பாடல் என நாம் அடிக்கடி முணுமுணுத்து, கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் இது போன்ற பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர்தான் இந்தக் குருவிக்கரம்பை சண்முகம் என்ற அற்புதப் பாடலாசிரியர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குருவிக்கரம்பை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது பெயருக்கு முன் தனது ஊர்ப் பெயரையும் இணைத்து குருவிக்கரம்பை சண்முகம் என்றே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசியராகவும், தமிழ் துறைத் தலைவராகவும் பணிபுரிந்து வந்த இவர், பாரதிதாசனால் ஈர்க்கப்பட்டு, அவரையே தனது ஆசானாகக் கொண்டு, இலக்கியப் பணி ஆற்றத் தொடங்கி, பல கவிதை நூல்கள், சிறுகதை தொகுப்பு, நாவல்கள் என எழுதி வந்த இவரை ஒரு திரையிசைப் பாடலாசிரியராக மாற்றிய பெருமை இயக்குநர் கே பாக்யராஜையே சேரும்.
ஒரு பாடலாசிரியராக பயணித்து வந்த இவர், “மாப்பிள்ளை மனசு பூப்போல” என்ற திரைப்படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்கி அதனால் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களையும் சந்தித்தார். 2006ம் ஆண்டு தனது 64வது அகவையில் மரணித்த இவருக்கு இலக்கிய உலகில் பல்வேறு பரிமாணங்கள் இருந்தாலும், இவரது தமிழ் புலமையும், கலைநயமிக்க இவரது கவிதைத் திறனும் இவரை ஒரு திரையிசைப் பாடலாசிரியராகவே வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்றால், அவர் தந்த திரையிசைப் பாடல்களின் தரமும், இலக்கியச் சுவையுமே காரணம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.