பிளாஷ்பேக்: ‛உதயசூரியன்' எம்ஜிஆர்
மகள் திலகம் எம்ஜிஆர் தனது படங்களுக்கு தலைப்பை தேர்வு செய்யும்போது காட்டும் அக்கறையை போன்று தனது கேரக்டரின் பெயர்களை தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பார். அவரது பெயர்கள் தூய தமிழில் இருக்கும், அழைப்பதற்கு எளிதாக இருக்கும். அப்படி அவர் தேர்வு செய்த கேரக்டர் பெயர்களில் முக்கியமானது 'உதயசூரியன்'.
திமுகவின் இளம் நட்சத்திர தலைவராக எம்ஜிஆர் இருந்தார். அவர் நடித்த படங்களில் நேரடியாகவோ, மறைமுகமாக கட்சி கொள்கைகளை பரப்பினார், கொடி, சின்னத்தை காட்டினார். பிரச்சாரமும் செய்தார். திமுக தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது நடித்த 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் தனது கேரக்டர் பெயரை கட்சியின் சின்னமான உதயசூரியனை வைத்து கொண்டார்.
படம் முழுக்க உதயசூரியனை யாரும் வீழ்த்த முடியாது, மேற்கில் மறைந்தாலும் மறுநாள் உதித்தே தீருவான் என்பது மாதிரியான வசனங்களை பேசினார்.
'சக்கரவர்த்தி திருமகள்' படத்தை பா. நீலகண்டன் இயக்கியுள்ளார். அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்தார். எஸ். வரலட்சுமி, பி.எஸ். வீரப்பா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், தங்கவேலு, டி.பி. முத்துலட்சுமி, லட்சுமி பிரபா மற்றும் மூத்த குணச்சித்திர நடிகர் ஈ.ஆர். சகாதேவன் ஆகியோரும் நடித்தனர்.
வீரமான இளைஞரான உதயசூரியன் நாட்டின் சக்கரவர்த்தியின் மகளின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு தனது வீரத்தை காட்டி சக்கரவர்த்தியின் மகளை மணந்து கொள்ளார். அதேநேரத்தில இளவரசியின் தோழிக்கு உதயசூரியன் மீது தீராத காதல். கணவன் மனைவியை பிரிக்க தோழி போடும் திட்டங்களை உதயசூரியன் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.