புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ்
2026 பொங்கலுக்கு நான்கு படங்கள் தான் வெளிவந்தன. எந்தப் புதிய படம் வந்தாலும் அவை ஒருவாரம் தாக்குப் பிடித்து ஹவுஸ்புல் ஆக ஓடுவது கடந்த சில வருடங்களில் நடப்பதில்லை. முதல் வார இறுதியில் மட்டும் தான் பெரிய நடிகர்களின் படங்கள் ஹவுஸ்புல் ஆகின்றன. பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் ஹவுஸ்புல் என்பது ஓரிரு காட்சிகளுக்கு மட்டுமே நடந்தது.
அதனால், நேற்று ஜனவரி 23ல் புதிதாக சில படங்களை வெளியிட்டார்கள். 'திரௌபதி 2, ஹாட்ஸ்பாட் 2 மச், ஜாக்கி, மாய பிம்பம், வங்காள விரிகுடா' ஆகிய புதிய படங்களுடன், அஜித் நடித்த 'மங்காத்தா' படம் நேற்று ரீரிலீஸ் ஆனது.
இவற்றில் 'மங்காத்தா' படம் மற்ற புதிய படங்களுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. புதிய படங்களுக்கு 25 சதவீத அளவில் கூட டிக்கெட் முன்பதிவு நடக்கவில்லை. அதேசமயம் 'மங்காத்தா' படத்திற்குப் பல தியேட்டர்களில் 75 சதவீதம் வரையில் முன்பதிவு நடைபெற்றுள்ளது. பல தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளைச் சேர்க்கிறோம் என்று அவர்களது எக்ஸ் தளங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் பதிவிட்டுள்ளார்கள்.
நேற்று வெளியான புதிய படங்களில் அதிக தியேட்டர்களில் வெளியான படமாக 'திரௌபதி 2' படம் இருக்கிறது. அப்படத்திற்கு ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 25 சதவீத அளவிற்கு முன்பதிவு நடந்துள்ளது. மற்ற படங்களில் நிலைமை மிகவும் மோசம். 'ஜாக்கி, மாயபிம்பம், வங்காள விரிகுடா' ஆகிய படங்களுக்கு சென்னையில் ஓரிரு காட்சிகள்தான் மட்டும்தான் கிடைத்துள்ளது.
விஜய் நடித்த 'தெறி' படத்தையும் நேற்று ரீரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், 'திரௌபதி 2, ஹாட் ஸ்பாட் 2 மச்' குழுவினர் அப்படத்தைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அதனால், அதையும் தள்ளி வைத்திருந்தார்கள். ஒருவேளை அந்தப் படமும் வந்திருந்தால் இந்தப் படங்களின் நிலை இப்போதைய நிலையை விட மிகவும் மோசமாக இருந்திருக்கும்.
சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்கும் 'அனைத்து வித்தைகளையும்' அதன் குழுவினர் செய்வதில்லை. இப்படியே போனால், வாரா வாரம் புதிய படங்களுடன் ஏதாவது ஒரு ரீரிலீஸ் படத்தை அதன் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் வெளியிடும் நிலை வரலாம். கூட்டம் வருகிறது என்பதற்காக தியேட்டர்காரர்களும் அவற்றை மனமுவந்து வரவேற்கலாம்.