பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை
பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா நேற்று முன்தினம் ஜன., 22ல் ஐதராபாத்தில் காலமானார். இதுதொடர்பாக ஜானகியின் பேத்தியும், முரளியின் மகளுமான அப்சரா வைத்யுலா வெளியிட்ட செய்தி...
எனது தந்தை அர்ப்பணிப்புள்ள மகனாக, பாட்டி ஜானகிக்கு தொடர்ந்து பக்க பலமாகவும் உறுதுணையாகவும் தனது இறுதி நாட்கள் வரை இருந்து வந்தார். அவர் தன் தாயின் வழியில் ஒரு திறமையான இசைக்கலைஞராகவும் இருந்தார். அவரது இறுதி மூச்சு அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் சூழ்ந்திருக்கப் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டன.
அவரது மறைவு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருப்பதால் எங்கள் உணர்வுகளைப் புரிந்து தனிமை தரக் கோருகிறோம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் ஜானகி நலமுடன் இருக்கிறார்.
எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் பரப்பப்படும் சில தேவையற்ற தீங்கிழைக்கும் வதந்திகள் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் உண்மையல்ல என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.