பிளாஷ்பேக்: ஒரு இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உருவான முதல் நட்பு
நாம் அன்னாந்து அதிசயித்துப் பார்த்த பல திரையுலக ஜாம்பவான்களின் கலையுலக ஆரம்ப காலம் என்பது கல்லும், முள்ளும் நிறைந்த ஓர் கடினமான பாதையை அவர்கள் கடந்து வந்ததாகத்தான் இருக்கும். அதற்கு எம் ஜி ஆர், சிவாஜி என்ற அந்த இருபெரும் ஆளுமைகளும் விதிவிலக்கல்ல. நாடகங்களில் மட்டுமே நடித்து வந்த எம் ஜி ஆர், சினிமாவிலும் நடிக்க ஆசை கொண்டு, பல போராட்டங்களுக்குப் பின் தனது தீவிர முயற்சியால் கிடைக்கப் பெற்ற ஓர் சினிமா வாய்ப்புதான் அவரது முதல் திரைப்படமான “சதிலீலாவதி” பட வாய்ப்பு.
ரங்கய்யா நாயுடு என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வான இவரை, சைக்கிளுடன் வரவேண்டும் என படத்தின் இயக்குநர் கூற, கையில் சைக்கிள் இல்லாத இவரோ, படப்பிடிப்புத் தளத்திற்கு அருகாமையில் யாரோ நிறுத்தி வைத்திருந்த ஒரு சைக்கிளை எடுத்து வந்து விட்டார். 'வேல் பிக்சர்ஸ்' என்ற ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தில், லேபரட்டரி பிரிண்டராக அப்போது பணிபுரிந்து வந்த கிருஷ்ணன் என்பவர், அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது புதிய ராலே சைக்கிளை காணவில்லை என அங்கும் இங்குமாக தேடி, பின் ஒருவரிடம் விசாரிக்க, அவரோ பக்கத்தில் “சதிலீலாவதி” என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதில் நடிக்க வந்த ஒருவர்தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார் என்ற விபரத்தைக் கூற, கோபம் கொண்ட அவர், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று பார்த்தபோது, அங்கே புதிதாக ஒருவர் இன்ஸ்பெக்டர் வேடத்தில் தனது சைக்கிளில் வேகமாக வந்து இறங்கி, நடிகர் எம் கே ராதாவை கைது செய்வது போன்ற ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு, நேராக அவரிடம் சென்று, யாரைக் கேட்டு என் சைக்கிளை எடுத்து வந்தீர்? என கடும் கோபத்துடன் கேட்டிருக்கின்றார்.
இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து வந்த அவரோ எந்தவித பதட்டமுமின்றி, நான் நடிக்கின்ற முதல் திரைப்படம் இதுதான். எத்தனையோ சிரமங்களுக்கு இடையே இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இன்றுதான் முதல் நாள் படப்பிடிப்பு. இங்கு வந்தவுடன்தான் நான் ஏற்று நடிக்கும் இந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு சைக்கிள் வேண்டும் என படத்தின் இயக்குநர் கூறினார்.
சைக்கிள் இல்லை என்றால், எனக்கு கிடைத்த இந்த நல் வாய்ப்பு எங்கே பறிபோய் விடுமோ? என பயந்து இந்த சைக்கிளை எடுத்து வந்துவிட்டேன். உங்களைக் கேட்காமல் எடுத்து வந்தது தப்புதான் என மன்னிப்பு கேட்கும் தொணியில் அந்த நடிகர் பேசியதைக் கேட்ட அந்த சைக்கிளின் உரிமையாளரான கிருஷ்ணன் கோபம் தணிந்து, பரவாயில்லை நடிச்சுட்டு வாங்க என அவரை தட்டிக் கொடுத்திருக்கின்றார்.
அன்று மோதலில் ஆரம்பித்த அந்த இருவரின் நட்பு, பின்னாளில் அசைக்க முடியாத ஆலமரமாய் வளர்ந்து நின்றது. சைக்கிளின் உரிமையாளரான அந்த கிருஷ்ணன் என்பவர்தான் பின்னாளில் கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டை இயக்குனர்களில் மூத்தவர். சைக்கிளை அன்று எடுத்து வந்த அந்த புதுமுக நடிகர் வேறு யாருமல்ல. இன்றும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம் எம் ஜி ஆர். “பெற்றால்தான் பிள்ளையா”, “எங்கள் தங்கம்”, “இதயவீணை” போன்ற எம் ஜி ஆரின் திரைப்படங்களை இயக்கயிருந்ததும் கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டை இயக்குனர்களே.