தர்மேந்திராவிற்கு பத்மவிபூஷண், மம்முட்டிக்கு பத்மபூஷன், மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல் படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டுக்கான பத்ம விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
சினிமா துறையை பொறுத்தமட்டில் கடந்தாண்டு மறைந்த பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திராவிற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரா 200க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முகத் தன்மையோடு திகழ்ந்தவர் தர்மேந்திரா.
பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள இவர் 400 படங்கள் வரை நடித்துள்ளார். தற்போது இளம் நடிகர்களுக்கு சமமாக தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார்.
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். நடிப்பு தாண்டி, இயக்குனராகவும் உள்ளார்.