உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 22 படங்களுடன் நிறைவடையும் ஜனவரி 2026 ரிலீஸ்

22 படங்களுடன் நிறைவடையும் ஜனவரி 2026 ரிலீஸ்

2025ம் ஆண்டைப் போலவே இந்த 2026ம் வருடத்திலும் 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவரலாம் என்பதை இந்த ஜனவரி மாதம் உணர்த்துகிறது. இந்த மாதத்தில் கடந்த வாரம் வரையில் 15 படங்கள் வெளியாகி இருந்தன. வரும் வாரம் ஜனவரி 30ம் தேதி ''க்ரானி, காந்தி டாக்ஸ், கருப்பு பல்சர், லாக் டவுன், மெல்லிசை, ராட்ட, திரைவி,” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களுடன் சேர்த்து இந்த மாதத்திய படங்களின் எண்ணிக்கை 22 ஆக உயரும். கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் வரலாம்.

கடந்த 2025ம் வருடத்தில் ஜனவரி மாதத்தில் 26 படங்கள் வெளியாகி இருநதன. அவற்றுடன் ஒப்பிடும் போது 4 படங்கள் குறைவுதான் என்றாலும் 20க்கும் மேற்பட்ட படங்கள் என்பதே வாரத்திற்கு சராசரியாக 4 படங்கள் என்ற எண்ணிக்கையில் வருகிறது.

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான முதல் படமான 'சல்லியர்கள்' படமே தியேட்டர் வெளியீட்டைப் புறக்கணித்து ஓடிடி பிளஸ் என்ற தளத்தில் வெளியானது. மற்றொரு ஓடிடி வெளியீடாக 'அனந்தா' படம் ஜனவரி 13ல் வெளியானது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ல் அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படம் நீதிமன்ற வழக்கு விசாரணை என தள்ளி வைக்கப்பட்டது. நாளை ஜனவரி 27ம் தேதி வர உள்ள தீர்ப்பைப் பொறுத்தே இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரிய வரும்.

பொங்கலுக்கு வெளியான மற்றொரு படமான 'பராசக்தி' படம் இந்த ஆண்டில் 100 கோடியை வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது. மற்றொரு படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 25 கோடி வரை வசூலாகியுள்ளது என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாங்கிய அனைவருக்கும் படம் லாபம் தந்துள்ளது என்கிறார்கள்.

மற்றொரு பொங்கல் படமான 'வா வாத்தியார்' படம் அதன் நாயகன் கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் மோசமான தோல்வி மற்றும் வசூலைக் கொடுத்த படமாக அமைந்துவிட்டது.

கடந்த வாரம் ஜனவரி 23ல் வெளிவந்த படங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய 'திரௌபதி 2' படம் ஓரளவிற்கு வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'மங்காத்தா' படத்தின் ரிரிலீஸ் காரணமாக தங்கள் படத்தைப் பற்றிப் பேச வைக்க முடியவில்லை என இயக்குனர் மோகன்ஜி வருத்தப்பட்டு வீடியோ வெளியிடும்படி ஆகிவிவிட்டது.

மற்ற படங்கள் ஓரிரு காட்சிகள், ஓரிரு நாட்கள் தாக்குப் பிடித்து ஓடியதே பெரிய விஷயம்தான்.

ஆக, ஜனவரி மாதம் பரபரப்பாகவும், சர்ச்சையாகவும், ஏமாற்றத்துடனும், கொஞ்சம் எதிர்பார்க்காத வெற்றியுடனும் கலவையாக முடியப் போகிறது.

பிப்ரவரி மாதத்திலும் சில பல சிறிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. சில படங்களின் அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டன.

ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வை அனைத்தும் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கான 'நாளைய தீர்ப்பை' எதிர்பார்த்து காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !