பத்மஸ்ரீ விருது - மும்மொழிகளில் நன்றி சொன்ன மாதவன்
நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய தினம் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த விதத்தில் 2026ம் ஆண்டிற்கான பல்வேறு துறைகளுக்கான விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர் ஆங்கிலத்திலும், சிலர் ஹிந்தியிலும், சிலர் தமிழிலும் வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.
அவரவர் வாழ்த்து தெரிவித்த மொழியில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாதவன். மத்திய அமைச்சர்களுக்கு ஹிந்தியிலும், தமிழக முதல்வருக்கு தமிழிலும், இதர அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்ததால் அவர்களுக்கு ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற உள்ள மாதவனுக்கு தமிழ் சினிமாவில் 'ரன்' படத்தின் மூலம் திருப்புமுனையைத் தந்தவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கிய முதல் படமான 'ஆனந்தம்' படத்தின் கதாநாயகன் மம்முட்டி பத்ம பூஷண் விருது பெற உள்ளார். தனது முதல் மற்றும் இரண்டாவது படங்களின் கதாநாயகர்கள் பத்ம விருது பெற்றுள்ளது குறித்து லிங்குசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.