உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உம்மா கொடுத்த தயாரிப்பாளர், பரிசு கொடுத்த இளையராஜா : இசையமைப்பாளர் ஷரத் காமெடி பேச்சு

உம்மா கொடுத்த தயாரிப்பாளர், பரிசு கொடுத்த இளையராஜா : இசையமைப்பாளர் ஷரத் காமெடி பேச்சு

தமிழில் ஜோதிகா நடித்த ஜூன் 6, ஜெயந்திரா இயக்கிய 180 படங்களுக்கு இசையமைத்தவர் பிரபல மலையாள இசையமைப்பாளர் ஷரத். இவர் சற்றே இடைவெளிக்குபின் நகுல் நடிக்கும் காதல் கதை சொல்லவா படத்துக்கு இசையமைக்கிறார். சென்னையில் நடந்த விழாவில் அவர் இளையராஜா குறித்து பல விஷயங்களை பேசினார்

அவர் பேசுகையில் ''இந்தப் படம் வெளியாகுமா என்கிற கேள்விக்குறி இருந்தது. இப்போது எல்லாம் கூடி வந்திருக்கிறது. இது ஒரு கனவு மாதிரி இருக்கிறது. இது கடவுளின் விருப்பம் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு திரைப்படம் உருவாக்குவதை விட அது வெளிவரும்போது தான் அது முழுமை பெறுகிறது. தமிழ்த்திரை உலகில் உள்ள எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா போன்றவர்களின் இசையைக் கேட்டு நான் வளர்ந்தவன் நான். மலையாளத்தில் இசையமைக்கும் போது கூட தமிழில்தான் டம்மி வரிகளை எழுதிக் கொள்வேன். அப்படி ஒரு இனிமையான மொழி தமிழ். எனக்கு தமிழ் மொழி மீது அன்பு பற்று பாசம் மதிப்பு மரியாதை உண்டு.

நான் இங்கே ஒரு படம் இசையமைத்தேன். மெட்டு போட்டு பாடல்கள் வரிகள் எல்லாம் எழுதி சித்ரா, மனோ பாடினார்கள். ஒலிப்பதிவும் செய்யப்பட்டு விட்டது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் நல்லவர் எப்போதும் பளபளவென்று ஜிப்பா போட்டிருப்பார். நான் எந்த இசைக் கருவியைத் தொட்டாலும், இசைத்தாலும் உடனே அவர் அற்புதம் என்று எனக்கு ஒரு உம்மா கொடுப்பார். அடுத்த கருவியைத் தொட்டால் இன்னொரு உம்மா கொடுப்பார். இப்படி அவர் பல முத்தங்கள் கொடுத்தார். ஆனால் எல்லாம் முடிந்து சம்பளம் என்று வருகிறபோது அவர் ஆளைக் காணவில்லை. ஓடிப்போனவர் வரவே இல்லை. எனக்கு அப்படி ஒரு ஏமாற்றம். அவர் எங்கிருக்கிறார் அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. நான் சாக முன்பு அவரைப் பார்த்துவிட வேண்டும்.

எனக்கு ஆஸ்கர் அவார்டு வாங்க வேண்டும் என்றோ ரஜினி சார் படத்தில் இசையமைக்க வேண்டும் என்றோ ஆசை இல்லை. அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும். நான் இளையராஜா சாருடைய விசிறி இல்லை. அவர் இசையில் எல்லாம் பாட முடியுமா என்று நான் நினைப்பேன். அது ஒரு கனவு போல இருந்தது. ஆனாலும் அது ஒரு நாள் நடந்தது. 'தாரை தப்பட்டை 'படத்தில் 'என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்' என்ற பாடலைப் பாடினேன். ஒரு நாள் நண்பர்கள் அழைத்த போது பிரசாத் ஸ்டுடியோ சென்றேன் அங்கே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது அருகில் அழைத்து என் கன்னத்தைத் தடவினார். இதுவரை நீ எங்கே இருந்தாய் என்றார். அது மட்டுமல்ல என்னை அழைத்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அது என் வீட்டில் இன்னும் இருக்கிறது.

மறுநாள் அழைத்தார். இசைக்கு எந்த விலையும் இல்லை பணம் கொடுக்க முடியாது தெரியுமா? என்றார். ஆமாம் அவரது இசையில் பாடியதற்குப் பணம் வாங்க முடியாது. வேறு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன், அடி கொடுத்தால் கூட சரி என்றேன். அவர் என் கையை விரித்து ஒன்று கொடுத்தார். அது ஒரு மோதிரம் அதுவும் நவரத்தின மோதிரம். எனக்கு அதைவிட வேறென்ன விருது வேண்டும்? ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது போல ஒரு மகிழ்ச்சியில் இருந்தேன். ஓ...என்று அழுதுவிட்டேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்தால் கூட அப்படி அழுது இருக்க மாட்டேன், அப்படி ஒரு அழுகை. அவர் இசையில் பல பாடல்களை பாடிய சித்ராவுக்கு எந்த பரிசும், ஏன் ஒரு பழம் கூட கொடுத்தது இல்லை. எனக்கு பரிசு கிடைத்து இருக்கிறது' என்று காமெடியாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !