பிளாஷ்பேக்: ஸ்ரீதரின் சிந்தையில் விளைந்த மாற்றம்... சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆர் திரைப்படம்
கதை, வசனம், பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து, யதார்த்தமான கதைக் களங்களோடு, புதுமைகளை உள்ளடக்கி, உணர்வுபூர்வமான திரைப்படங்களைத் தந்து திரையுலகின் உச்சம் தொட்டவர்தான் 'புதுமை இயக்குநர்' சி வி ஸ்ரீதர். “கல்யாண பரிசு”, “நெஞ்சில் ஓர் ஆலயம்”, “நெஞ்சிருக்கும் வரை”, “அவளுக்கென்று ஓர் மனம்”, “இளமை ஊஞ்சலாடுகிறது” போன்ற முக்கோணக் காதல் கதையாக இருந்தாலும், அல்லது “காதலிக்க நேரமில்லை”, “ஊட்டி வரை உறவு” போன்ற முழுநீள நகைச்சுவையை உள்ளடக்கிய திரைப்படங்களாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் அவரது சொந்த கற்பனையில் விளைந்த காவியப் படைப்புகள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஒளிப்பதிவு கருவியை ஓரிடத்தில் நிலையாக நிறுத்தி, படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், அதனை அசைய வைத்துப் படப்பிடிப்பு நடத்தியவர்தான் இயக்குநர் ஸ்ரீதர். கிரேனில் ஒளிப்பதிவு கருவியைத் தொங்க வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என அவர் தீர்மானித்துவிட்டால், தலைகீழாக வவ்வால் போல அதன் மீதே தொங்கிக் கொண்டு படப்பிடிப்பிற்கான கோணத்தை சரிபார்ப்பவர் இவர். படப்பிடிப்புத் தளத்திற்குள் இயக்குநர் என்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டு படப்பிடிப்பு முடிகின்ற வரை வெறும் ஸடார்ட், கட், ஓகே சொல்கின்ற இயக்குநராக இவர் இருந்ததே இல்லை. அந்த அளவிற்கு சுறுசுறுப்பான இயக்குநராக தமிழ் திரையுலகில் பார்க்கப்பட்டவர்.
தனது ஆகச் சிறந்த படைப்புகளால், புத்திசாலி ரசிகர்களுக்கு கதை சொல்பவர் என்ற பெயர் பெற்றிருந்த இயக்குநர் ஸ்ரீதர், 1970களின் ஆரம்பத்தில் “அலைகள்” போன்ற அவரது சில படைப்புகளின் பின்னடைவு காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி, அதன் பின் தனது இயல்பான பாணியிலிருந்து முற்;றாக மாறி, முதன் முதலாக எம் ஜி ஆரை வைத்து அவர் தயாரித்து இயக்கிய ஒரு திரைப்படம்தான் “உரிமைக்குரல்”.
ஏ நாகேஸ்வரராவ் மற்றும் வாணிஸ்ரீ நடித்து, 1971ம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படமான “தசரா புல்லோடு” என்ற தெலுங்கு திரைப்படத்தின் உரிமையை வாங்கி, தமிழுக்காக “உரிமைக்குரல்” ஆக்கித் தந்தார் இயக்குநர் சி வி ஸ்ரீதர். பெரும்பாலும் தனது கற்பனையில் உதித்த கதைகளையே திரை வடிவமாக்கித் தந்து கொண்டிருந்த இயக்குநர் ஸ்ரீதர், முதன் முதலாக ஒரு தெலுங்கு திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக வந்ததுதான் இந்த “உரிமைக்குரல்”.
“தசரா புல்லோடு” திரைப்படத்தை அப்படியே தமிழ் வடிவமாக்காமல், எம் ஜி ஆருக்கு ஏற்றவாறு திரைக்கதையில் மாற்றம் செய்து தந்த இத்திரைப்படம், 1974ம் ஆண்டு வெளிவந்து, வெள்ளிவிழா கண்டதோடு, இயக்குநர் ஸ்ரீதரின் கலையுலகப் பயணத்தின் அடுத்த சுற்றுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகவும் இருந்தது இந்த “உரிமைக்குரல்” என்றால் அது மிகையன்று.