உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'திரௌபதி 2' : ஐஎம்டிபி ரேட்டிங்கில் விளையாடும் ரசிகர்கள்

'திரௌபதி 2' : ஐஎம்டிபி ரேட்டிங்கில் விளையாடும் ரசிகர்கள்


ஒரு காலத்தில் வெளியாகும் புதிய படங்களுக்கான விமர்சனம் என்பது அந்தப் படத்தின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டுவதாக இருக்கும். பத்திரிகை விமர்சனங்கள் நடுநிலையுடன் இருந்து அந்தப் படங்களுக்கும், அந்தப் படங்களில் பங்கேற்றவர்களுக்கும் தங்கள் குறைகளைக் களையவும், அவர்களை மேலும் வளர்த்துக் கொள்வதையும் செய்தன.

ஆனால், இப்போது சினிமா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் கூட புதிய படங்களுக்கான 'ரேட்டிங்'கைப் போடக் கூடாதென நீதிமன்றம் மூலம் தடை வாங்கிவிடுகிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சில போலியான கணக்குகளை ஆரம்பித்து ஓடாத படங்களுக்கும் அதிக ரேட்டிங்குகள் கிடைக்கும்படி அந்தப் படங்கள் சம்பந்தப்பட்டவர்கள் செய்கிறார்கள். போட்டி நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் அதற்கும் குறைவான ரேட்டிங்கைக் கொடுத்து அந்தப் படங்களை இறக்கிவிடும் வேலைகளைச் செய்கிறார்கள். பயனாளர்கள் அந்தப் படங்களுக்கு ரேட்டிங் கொடுப்பதால் இப்படி ஒரு சூழல் வருகிறது.

அதனால்தான், கடந்த டிசம்பர் மாதம் வெளியான '45, மார்க், த டெவில்' ஆகிய கன்னடப் படங்களுக்கும், சங்கராந்திக்கு வெளியான 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்திற்கும் இப்படி ரேட்டிங் வெளியிடக் கூடாதென நீதிமன்றத் தடை பெற்றார்கள்.

கடந்த வாரம் வெளியான தமிழ்ப் படமான 'திரௌபதி 2' படத்திற்கு வரவேற்பு குறைவாக இருக்கிறது என அதன் இயக்குனர் மோகன் ஜி படம் வெளியான மறுநாளே வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், நேற்று காலை ஐஎம்டிவி இணையதளத்தில் தங்களது 'திரௌபதி 2' படத்திற்கு 10க்கு 9 ரேட்டிங் கிடைத்துள்ளது என பெருமையாகப் பதிவிட்டிருந்தார்.

நேற்றைய ஒரு நாளிலேயே போட்டி ரசிகர்கள் அதில் விளையாடி விட்டார்கள். தற்போது அந்தப் படத்திற்கு அந்த இணையதளத்தில் 10க்கு 6.2 தான் உள்ளது. இயக்குனர் பதிவிட்டிருந்த போது மொத்தம் 1100 பேர் ரேட்டிங் போட்டிருந்தார்கள். தற்போது கூடுதலாக 300 பேர் மட்டுமே ரேட்டிங் போட்டு அதை இறக்கிவிட்டுள்ளார்கள்.

ஐஎம்டிபி உலக அளவில் சினிமா பற்றிய தகவல்கள் அனைத்தையும் வைத்திருக்கும் ஒரு இணையதளம். இப்படியான விளையாட்டுக்களால் இனி அந்த இணையதளத்திலும் ரேட்டிங் வரக் கூடாதென யாராவது நீதிமன்றத் தடை வாங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !