வரப் போகும் படங்கள் கிர்த்தியைக் காப்பாற்றுமா?
2019ல் வெளியான 'உப்பெனா' படம் மூலம் அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. அறிமுகப் படமே அவருக்கு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அதன்பின் நடித்த 'ஷியாம் சிங்க ராய்' படமும் பெயரைத் தேடித் தந்தது. அதன்பின் தெலுங்கில் சில படங்களை நடித்ததுடன் தமிழ், மலையாளத்திலும் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கில் தயாரான 'த வாரியர்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கடுத்தும் தமிழ், தெலுங்கில் தயாரான 'கஸ்டடி' படத்திலும் கதாநாயகியாக நடித்தார். பொங்கலுக்கு வெளிவந்த 'வா வாத்தியார்' படத்திலும் கார்த்தி ஜோடியாக நடித்தார். தமிழில் தொடர்ந்து நடித்த மூன்று படங்களும் ஓடவேயில்லை. அதே சமயம் அவரது மலையாள அறிமுகப் படமான 'எஆர்எம்' படம் 100 கோடி வசூலைக் குவித்தது.
தெலுங்கு, மலையாளத்தில் வெற்றியைப் பார்த்தவருக்கு தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காமல் உள்ளது. அடுத்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகவும், 'ஜீனி' படத்தில் ரவி மோகன் ஜோடியாகவும் நடித்துள்ளார். அடுத்தடுத்து வர உள்ள இந்தப் படங்கள்தான் கிர்த்தியை தமிழ் சினிமாவில் காப்பாற்ற வேண்டும்.