பிளாஷ்பேக்: 3 பேருக்கு ரீ என்ட்ரி கொடுத்த 'அக்னி நட்சத்திரம்'
சினிமாவை விட்டு விலகி இருக்கும் முன்னாள் நட்சத்திரங்களை அழைத்து வந்து அவர்கள் முந்தைய படங்களில் நடித்த கேரக்டர்களுக்கு நேரெதிரான கேரக்டர்களை கொடுத்து அவர்களை லைம் லைட்டிற்கு கொண்டு வருவது மணிரத்னத்தின் ஸ்டைல். அவரது ஒவ்வொரு படத்திலும் இப்படி ஒரு நடிகரையோ நடிகையையோ கொண்டு வருவார்.
இந்த வகையில் அக்னி நட்சத்திரம் படத்தில் விஜயகுமார், சுமித்ரா, ஜெயசித்ரா ஆகியோரை கொண்டு வந்தார். விஜயகுமார் இரண்டு மனைவிகளை கொண்ட அதிகாரியாகவும், அவரது முதல் மனைவியாக சுமித்ராவும், இரண்டாவது மனைவியாக ஜெயசித்ராவும் நடித்தார்கள்.
முதல் மனைவி என்கிற மிடுக்குடன் வருவார் சுமித்ரா. என்றாலும் கணவருக்கு இன்னொரு உறவு இருக்கிறது என்கிற விஷயம் எந்தவொரு பெண்ணுக்கும் வாழ்நாள் முள்தான். அந்த வேதனையையும் ஊடாகத் தந்திருப்பார். இரண்டாவது மனைவி என்கிற தாழ்வுணர்ச்சி, குற்றவுணர்ச்சி போன்றவற்றை அமைதியான முகபாவத்துடன் தந்து அசத்தியிருப்பார் ஜெயசித்ரா. இவர் நாயகியாக நடித்த காலத்தில் துடுக்குத்தனமான பாத்திரங்களுக்குப் பெயர் பெற்றவர். இப்படியொரு அமைதியான, சகிப்புத்தன்மையுடன் கூடிய நிதானமான பாத்திரத்தில் ஜெயசித்ரா நடிப்பு வித்தியாசமாக இருந்தது.
இந்த படத்திற்கு பிறகு மூவருமே பல ஆண்டுகள் தொடர்ந்து நடித்தார்கள். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.