உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க வேண்டும்: மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு

ஜனநாயகன் வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க வேண்டும்: மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு


எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் தாமதமானதால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், பொங்கலுக்கு பட ரிலீஸ் வெளியாகாமல் தள்ளிப்போனது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வு விசாரித்தது. ஜன.20ம் தேதி நடந்த விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜன.,27க்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர்.

அதன்படி, இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ''ஜனநாயகன் படத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப்பிரச்னையை ஏற்படுத்தும் வசனம், காட்சிகள் உள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி புகார் அளித்துள்ளார். மத அடையாளங்களை அவதூறு செய்வதை ஏற்க முடியாது. இந்த வழக்கில், தணிக்கை வாரியத்திற்கு தனி நீதிபதி போதுமான கால அவகாசம் வழங்கவில்லை. எனவே, தனி நீதிபதி பி.டி.ஆஷா மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அதனை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்'' எனத் தீர்ப்பளித்தார்.

தேர்தலுக்கு முன் வருமா
மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்ற அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பால், ஜனநாயகன் பட வெளியீடு மேலும் தள்ளிப்போகிறது. தனி நீதிபதி பி.டி.ஆஷா, வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்து, தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் கொடுத்து, அதன்பின்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் துவக்கத்தில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பதால், அந்த வகையிலும் படம் வெளியாவதில் சிக்கல் எழலாம். எனவே, தேர்தலுக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பளித்து படம் வெளியாகுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !