ஒரே படத்தில் 5 ஹீரோயின்கள், 5 இயக்குனர்கள்
ராஜு ஷெரேகர் என்பவர் தயாரித்துள்ள படம் 'வெளவல்ஸ் : அன் அட்லஸ் ஆப் லவ்'. என்ற படத்தில் சம்யுக்தா விஷ்வநாதன், விஜயஸ்ரீ, காஜல் சவுத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட் என 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து , பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர் மற்றும் அருள் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி ஒளிப்பதிவு செய்கிறார்கள், சரவண சுப்பிரமணியம் இசை அமைக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் கூறும்போது “இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல். காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை - ஆபத்து, தியாகம் - கொடூரம், மாயை - இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும்.
படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளை பேசும். நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் என அனைத்து உணர்வுகளும் இணைந்து காதலை அழகான மொழியாக சித்தரிக்கிறது. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர்” என்றார்.