உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வா வாத்தியார்' நாளையே ஓடிடி ரிலீஸ்

'வா வாத்தியார்' நாளையே ஓடிடி ரிலீஸ்


நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் 'வா வாத்தியார்'. இப்படம் முதலில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 12ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் செலுத்த வேண்டிய சுமார் 21 கோடி ரூபாயை செலுத்திய பின்புதான் படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்தனர்.

பொங்கலுக்கு முன்பாக அந்தப் பணத்தை செலுத்திய பின்பும், மீதமுள்ள கடன்களை முழுவதுமாக அடைத்த பின்பும், இந்தப் படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறேன் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதன்படி ஜனவரி 14ம் தேதி வெளியானது.

இருப்பினும் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் மோசமான தோல்வி மற்றும் வசூலைப் பெற்ற படமாக இது அமைந்தது என்றார்கள்.

இந்நிலையில் படம் வெளியான இரண்டு வாரங்களில் நாளை ஓடிடியில் வெளியாகிறது. அமேசான் பிரைம் தளத்தில் நாளை (ஜனவரி 28) வெளியாகும் என அவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

பொதுவாக படம் வெளியான நான்கு வாரங்களில்தான் ஓடிடியில் வெளியாவது வழக்கம். இப்படம் இரண்டு வாரங்கள் முன்னதாகவே வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !