உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' கடந்து வந்த பாதை…எப்போது முடிவுக்கு வரும்?

'ஜனநாயகன்' கடந்து வந்த பாதை…எப்போது முடிவுக்கு வரும்?


கர்நாடகாவைச் சேர்ந்த, கன்னட சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடிக்க உருவான படம் 'ஜனநாயகன்'.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்த சில மாதங்களுக்குப் பின் விஜய்யின் கடைசி படமாக அவரது 69வது படமாக அறிவிக்கப்பட்ட படம். விஜய்யின் கடைசி படத்தை கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்க இருப்பது, அதுவும் அரசியல் கட்சி அறிவிக்கப்பட்ட பிறகு நடப்பது பல கேள்விகளை எழுப்பியது.

அறிவிக்கப்பட்ட பின் ஒரு மாதத்திலேயே ஆரம்பித்து, எந்த இடையூறும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். கடந்த வருடம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் படத்திற்கு 'ஜனநாயகன்' என்ற தலைப்பையும் வைத்து முதல் பார்வையையும் வெளியிட்டார்கள். படத்தின் தலைப்பும் அரசியல் சார்ந்த ஒரு தலைப்பாக இருப்பதாக பேச்சு எழுந்தது.

அனைத்து வேலைகளையும் முடித்து ஜனவரி 9ம் தேதி படம் வெளியாக உள்ளதாக அறிவித்தார்கள். அடுத்து டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.

2026 ஜனவரி 3ம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமாகவும் கொஞ்சம் அரசியல் கலந்த படமாகவும் இருக்கும் என்பது டிரைலரைப் பார்த்ததும் தெரிந்தது. டிரைலர் வெளியான பின்பு இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், ஒரிஜினல் தெலுங்குப் படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடி, படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு, இடைவேளைக்குப் பிறகு பல காட்சிகளை மாற்றிவிட்டார்கள் என்று சொன்னார்.

'பகவந்த் கேசரி' படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது, அந்தப் படத்தை தனது கடைசி படமாக ரீமேக் செய்ய வேண்டும் என்று விஜய்க்கு ஏன் ஆசை வந்தது என பலரும் அந்தத் தெலுங்குப் படத்தை ஓடிடி தளத்தில் தேடிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

இதனிடையே, ஜனவரி 9ம் தேதி அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்துக்குப் போட்டியாக 'பராசக்தி' படம் வர உள்ளது என்ற தகவல் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது. ஜனவரி 14 வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்த 'பராசக்தி' படத்தை வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சில நாட்கள் முன்னதாக ஜனவரி 10 வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். இதனால், 'பராசக்தி' படத்தையும், சிவகார்த்திகேயனையும் சமூக வலைதளங்களில் கண்டபடி விமர்சிக்க ஆரம்பித்தார்கள் விஜய் ரசிகர்கள்.

எல்லாம் பரபரப்பாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் 'ஜனநாயகன்' படத்திற்குத் தணிக்கை வழங்க தாமதமாகிறது என்ற செய்தி விஜய் ரசிகர்களிடம் இடியாக விழுந்தது. ஜனவரி 6ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்க, தணிக்கை வாரியத்திற்கு உத்தவிட வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிற்கு தணிக்கை வாரியத் தரப்பிலிருந்து ஜனவரி 7ம் தேதி பதிலளிக்கப்பட்டது.

அடுத்து ஜனவரி 9ம் தேதி வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'யு/ஏ 16 +' சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்றைய தினமே தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, பின்னர் தள்ளி வைத்தது.

இதனிடையே, ஜனவரி 12ம் தேதியன்று டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 15ம் தேதி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.

அதற்கடுத்து கடந்த வாரம் ஜனவரி 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழக்கை மீண்டும் விசாரித்தது. இரு தரப்புக்கும் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாதம் செய்வதற்கு நேரம் தரப்பட்டது. இரு தரப்பு வாதங்கைளயும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இரு தினங்களுக்கு முன்பு, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஜனவரி 27 வெளியாகும் என்று தகவல் வந்தது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்ற அமர்வு தீர்ப்பை அறிவித்தது.

அதன்படி, இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதிக்கே திருப்பி அனுப்பி, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து விசாரிக்கவும், அதை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

'ஜனநாயகன்' படத்தின் மீது படத்தைப் பார்த்த உறுப்பினர்களில் ஒருவர் புகார் அளித்ததாக முதலிலேயே தணிக்கை வாரியம் கூறியிருந்தது. அந்த புகார் இன்று வெளியானது. அதன்படி படத்தில், “வெளிநாட்டு சக்திகள், இங்கு மதப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமான வசனங்கள், காட்சிகள் உள்ளது என்றும், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான அதற்குரிய நிபுணர் குழுவில் இடம் பெறவில்லை என்றும், படத்தைத் தணிக்கைக்காகப் பார்த்த போது சில நடைமுறை குறைபாடுகள் இருந்தது,” என்றும் அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக வெளிவந்துள்ளது.

தணிக்கை வாரியம் தங்களுக்கான பதிலை அளிக்க சரியான அவகாசம் தரவில்லை என்று சொன்னதை கவனத்தில் கொண்டு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படலாம். அந்த நடைமுறைகள் எத்தனை நாட்களில் மேற்கொள்ளப்படும், புகாரில் குறிப்பிட்டிருந்தபடியான காட்சிகள் இருப்பின், அதை சரி செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கும் என்ன காலவரையறை என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

அனைத்துமே விதிப்படி, சட்டப்படி நடைபெற்றாக வேண்டிய சூழலை தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளதன் மூலம் ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இப்படி ஒரு வழக்கு மீண்டும் வந்தால் அதற்கு இந்த வழக்கும், இதன் நடைமுறைகளும், விசாரணைகளும், தீர்ப்பும் தான் முன்னுதாரணமாக அமையும்.

எனவே, அனைத்தையும் கருத்தில் கொண்டே 'ஜனநாயகன்' வழக்கில் தணிக்கை வாரியம், நீதிமன்றம் செயல்படும்.

வழக்கு நடந்து தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டபடி 'ரிவைசிங் கமிட்டி'க்கு படத்தை அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு இரண்டு வாரம் முதல் இருபது நாட்கள் வரை ஆகலாம். ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஆட்சேபனை இருந்தால் அதில் தேவையான திருத்தங்கள், மாற்றங்களைச் செய்யச் சொல்லிக் கேட்கலாம். சினிமாட்டோ கிராப் சட்டம் 1952, சினிமாட்டோகிராப் சான்றிதழ் விதிகள் 2024 உள்ளிட்டவை தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் பின்பற்றப்படும்.

இவையனைத்தும் முடிவடைய ஒரு மாதம் ஆகுமா அல்லது அதற்கு மேல் ஆகுமா என்ற கேள்வி தான் பலரது மனதில் எழுந்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு அடுத்த சில நாட்களில் பதில் கிடைக்கலாம்.

2026 சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் மட்டுமே படம் அடுத்த மாதத்திலாவது வெளியாகும். தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால் தேர்தல் முடிந்த பிறகே படம் வெளியாகும் சூழல் உருவாகும். விஜய் அரசியல் கட்சியின் தலைவர் என்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிடும்.

'ஜன நாயகன்' வெளியீடு என்பது அப்படம் சம்பந்தப்பட்டவர்களின் மனதில் தற்போது ஒரு 'கணத்தை' ஏற்படுத்திவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !