விரைவில் சந்திப்போம்: கமல்ஹாசனுக்கு மம்முட்டி நன்றி
2026ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று முதலில் பொதுவான ஒரு நன்றியை மட்டும் பதிவிட்டிருந்தார் மம்முட்டி. அதன்பின் சில மணி நேரம் கழித்து, கேரள முதல்வர், தமிழக முதல்வர், ஆந்திர துணை முதல்வர் மற்றும் கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, மகேஷ்பாபு, ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்களுக்கும் தனித் தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.
மம்முட்டிக்கு கமல்ஹாசன் தெரிவித்திருந்த வாழ்த்தில், “என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முட்டி அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு 'கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்' நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம். நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு.
நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்முட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து,” என்று கூறியிருந்தார்.
அதற்கு மம்முட்டி, “அன்புள்ள கமல், உண்மையிலேயே இந்த அடக்கமான வார்த்தைகளுக்கு நன்றி. நீங்கள் மிகவும் அன்பாக இருக்கிறீர்கள். ஆம், விரைவில் சந்தித்து, நாம் இழந்த நேரத்தை ஈடுசெய்வோம்,” என்று பதிலளித்துள்ளார்.
மலையாளத்திலும் படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், தமிழில் கூட மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், மம்முட்டியுடன் இணைந்து நடித்ததில்லை. எதிர்காலத்தில் இருவரும் இணைந்து நடித்தால் இருவரது ரசிகர்களுக்குமே மகிழ்ச்சிதான்.