100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கண்கள் இரண்டால்'
தமிழ் சினிமாவில் சில மறக்க முடியாத பாடல்கள் அந்தந்த கால கட்டங்களில் வரும். அப்படியான ஒரு பாடலாக 2008ம் ஆண்டு வெளிவந்த பாடல் 'கண்கள் இரண்டால்' பாடல்.
சசிகுமார் இயக்கம் நடிப்பில் முதல் படம், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் முதல் படம், நாயகி ஸ்வாதிக்கு தமிழில் முதல் படம் என அமைந்தது 'சுப்பிரமணியபுரம்' படம். அந்தப் படத்தில் தாமரை எழுதி, பெல்லி ராஜ், தீபா மரியம் பாடிய பாடல் தான் 'கண்கள் இரண்டால்'.
படம் வெளியான போது சூப்பர் ஹிட்டானது. அப்போது சாட்டிலைட் டிவிக்களில் அதிகம் ஒளிபரப்பப்பட்ட பாடலாகவும், எப்எம் வானொலிகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாகவும் இருந்தது. ஜேம்ஸ் வசந்தனின் மெலடி இசையும், தாமரையின் அழகிய வரிகளும் பாடலை அற்புதமாக்கின. பாடலில் நடித்த ஜெய், ஸ்வாதி இருவருமே அவர்களது யதார்த்த நடிப்பில் கவர்ந்தார்கள். ஜெய்யின் அந்தத் தலையசைப்பு அப்போது ரொம்பவே பேமஸ்.
2015ல் யு டியூப் தளத்தில் இந்தப் பாடலின் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு 'பையா' படத்தில் யுவன் இசையில் இடம் பெற்ற 'துளித் துளி' பாடலும் அதிக வருட இடைவெளியில் 100 மில்லியனைக் கடந்தது.
படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன பிறகும் 'கண்கள் இரண்டால்' பாடல் கண்களுக்கும், காதுகளுக்கு இனிமையைச் சேர்த்து வருகிறது.