லோகேஷ் கனகராஜ் திடீர் பிரஸ் மீட் ஏன்...?
சினிமாவுக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் தனிப்பட்ட முறையில் லோகேஷ் கனகராஜ் மீடியாவை சந்தித்து இல்லை. தான் சம்பந்தப்பட படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் மட்டும் பேசினார். அந்த படங்கள் குறித்து மட்டுமே பேட்டி கொடுத்து வந்தார். இந்நிலையில், சென்னையில் முதன்முறையாக தனிப்பட்ட முறையில் நேற்று பிரஸ்மீட் நடத்தினார்.
இப்படி நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று விசாரித்தால் பல தகவல்கள் கிடைக்கின்றன. கூலி ரிலீசுக்குபின் லோகேஷ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கூலி கதை, திரைக்கதை விஷயத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகள், கிண்டல்கள் வந்தன. அது குறித்து அவர் விளக்கம் அளிக்க நினைத்தார். அதற்காகவும் இந்த பிரஸ்மீட்.
கூலி படம் சென்சாரில் சிக்கியது, என்னென்ன பிரச்னை என்பது குறித்து பிரஸ்மீட்டில் விவரித்தார். மேலும் ஏ சான்றிதழ் வாங்கியதால் 50 கோடி வரை வசூல் இழப்பு ஏற்பட்டது என்றார். அதேபோல், ரஜினி, கமல் படத்தை அவர் தான் இயக்கியிருக்க வேண்டும். ஆனால், அதிக சம்பளம் கேட்டதால் அந்த பட வாய்ப்பு பறிபோனது என்று அவர் குறித்து தகவல் பரப்பபட, நான் கதை சொன்னேன். அது ஆக் ஷன் கதை. ஆனால், அவர்கள் அப்படிப்பட்ட கதையை விரும்பவில்லை. கொஞ்சம் லைட்டாக விரும்பினார்கள். அதனால், அந்த படம் கை விட்டு போனது, சம்பளம் முக்கியமில்லை. என்று தெளிவுப்படுத்தினார்.
தவிர, கைதி 2 படத்தை அவர் இயக்குவரா? மாட்டாரா? அடுத்து அல்லு அர்ஜூன் படத்தை இயக்கப் போகிறாரே என்று விமர்சனங்கள் வந்த நிலையில், கைதி 2 குறித்து அந்த படத்தை தயாரிக்க உள்ள எஸ்.ஆர்.பிரபு, கார்த்தி ஆகியோரே லோகேஷ் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்று செய்திகள் பரவிய நிலையில், அதற்கும் விளக்கம் அளித்தார்.
இப்போது அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். அடுத்து என் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். நான் அடுத்து கைதி 2வை இயக்கப் போகிறேன். முன்பே இயக்க வேண்டியது, நான் ரஜினி படத்துக்கு சென்றதால், கார்த்தி அந்த தேதியை வேறு ஒருவருக்கு கொடுத்தார். அதனால் தாமதம் என்றார்.
மேலும் தான் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள் குறித்து விரிவாக சொன்னார். அவர் எல்சியூ பாணி தொடருமா என பலரும் சந்தேகப்பட்ட நிலையில், அது தொடரும் என்றார். கடைசியில், தனது மீது சுமத்தப்படும் வன்முறை, போதை கலாச்சார குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். விஜய்க்கு சினிமா ஆதரவு மட்டுமே, அரசியல் ரீதியாக எந்த ஆதரவும் இல்லை. தான் பிரச்சாரத்துக்கு போக மாட்டேன், ஜனநாயகனின் கவுரவ வேடத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தனக்கும் எந்த நடிகைக்கும் காதல் இல்லை என்றும் சொல்லிவிட்டு புறப்பட்டார். ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்கிறார்கள் கோலிவுட்டில்.