மவுன படமான “காந்தி டாக்ஸ்” டிரைலர் வெளியீடு
ஜீ ஸ்டுடியோஸ் உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் “காந்தி டாக்ஸ்”. விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கி உள்ளார். கமலின் பேசும் படம் போன்று வசனங்கள் இல்லாமல் மவுன படமாக இது உருவாகி உள்ளது.
விஜய் சேதுபதி கூறுகையில், “வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை 'காந்தி டாக்ஸ்' எனக்கு அளித்தது. மவுனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது” என்றார்.
அரவிந்த்சாமி கூறுகையில், “சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மவுனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை 'காந்தி டாக்ஸ்' நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது” என்றார்.
அதிதி ராவ் கூறியதாவது, “வார்த்தைகளை விட உணர்வுகள் தான் இதில் என்னை அதிகம் நெகிழ வைத்தது. மவுனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது” என்றார்.
வரும் ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.