போயஸ் கார்டனில் ரஜினி வீட்டில் நடந்தது என்ன? : தங்கசங்கிலி பெற்ற மதுரை பரோட்டா சேகர் பேட்டி
மதுரையில் வெறும் 5 ரூபாய்க்கு பரோட்டா விற்கும் சேகர் என்ற தனது ரசிகரை சென்னை போயஸ்கார்டன் வீட்டுக்கு அழைத்து, தங்கசங்கலி அணிவித்து பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். அந்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகின. தினமலர் சார்பில் சேகரை தொடர்பு கொண்டு பேசினோம். நீங்க யார்? ரஜினியின் எப்படிப்பட்ட ரசிகர்கள், அன்றைய தினம் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்று கேட்டோம். சேகர் அளித்த பேட்டி:
என் சொந்த ஊர் துாத்துக்குடி மாவட்டம், கீழசண்முகபுரம். சின்ன வயதிலேயே மதுரைக்கு வந்துவிட்டேன். ரொம்பே கஷ்டப்பட்டேன். பல ஓட்டல்களில் வேலை செய்து தொழில் கற்றேன். மதுரை, வண்டியூர் பெருமாள் கோயில் அருகில் பல ஆண்டுகளாக இந்த 5 ரூபாய் பரோட்டோ கடை நடத்தி வருகிறேன். சின்ன வயதில் இருந்தே ரஜினி ரசிகர். அப்போது என் சம்பளம் ஒரு ரூபாய். அதை கொண்டு அன்றே ரஜினி படம் பார்ப்பேன். முதல்நாளில் படம் பார்க்க வேண்டும் என்பது என் கொள்கை. அடுத்து என் பேமிலியை அழைத்து சென்று அவர் படம் பார்ப்பேன். என் கையில் அவர் பெயரை பச்சை குத்தியுள்ளேன். நான் சின்ன வயதில் கஷ்டப்பட்டு இருப்பதாலும், ரஜினி நல்ல குணங்களால் ஈர்க்கப்பட்டு இருப்பதாலும், அனைத்து மக்களும் குறைந்த விலையில் பசியாற 5 ரூபாய்க்கு பரோட்டோ விற்க ஆரம்பித்தேன். பல ஆண்டுகளாக அந்த விலையை அதிகரிக்கவில்லை. வருங்காலத்திலும் அதிகரிக்க மாட்டேன். என் கடை முழுக்க ரஜினி படம் இருக்கும். ரஜினி போட்டோவுடன் தான் பெயர் பலகை இருக்கும். இந்த செய்தி பலருக்கும் பரவியது.
தினமும் 350க்கும் அதிகமான பரோட்டோ விற்று வருகிறோம். குழந்தைகள், பசியோடு இருப்பவர்கள் நிலைக்கு ஏற்ப கூடுதல் பரோட்டோக்களை கொடுப்பேன். பசியாற்றுவதுதான் என் முதல் லட்சியம். என்னை பற்றி கேள்விப்பட்ட ரஜினி சார் சென்னைக்கு அழைத்தார். நான் பல ஆண்டுகளுக்கு முன்பே அவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது ஜெயலலிதா அம்மா ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. என்னை போயஸ் கார்டனுக்குள்ளே விடவில்லை. இந்தமுறை ரஜினி சார் தரப்பில் இருந்து, அவர்கள் செலவில் மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.
நான், மனைவி, மகள், மருமகன், பேரனுடன் சென்னைக்கு பஸ்சில் வந்தோம். இங்கே வந்தவுடன் காரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று தங்க வைத்து நன்றாக கவனித்தார்கள். காலை 9.30க்கு அவர்களே ரஜினி சார் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். அவரை பார்த்தவுடனே காலில் விழுந்துவிட்டேன். அவரும் உற்சாகமாக பேசினார். உங்களுக்கு எப்படி 5 ரூபாய்க்கு பரோட்டா கட்டுப்படி ஆகிறது என்று கேட்டார். குடும்பத்தினர் நலம் விசாரித்தார். என் குடும்பத்துடன் தனித்தனியாக, குரூப்பாக போட்டோ எடுத்து எனக்கு தங்க சங்கிலி அணிவித்தார். அதை எதிர்பார்க்கவில்லை. என் பேரனை கொஞ்சினார் அந்த போட்டோ வைரல் ஆனது. உங்க பணி தொடரணும் என்று வாழ்த்தினார்.
அவரை பார்த்த, பேசிய சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன். என் வாழ்நாள் முழுக்க 5 ரூபாய் பரோட்டோ சேவையை தொடரணும் என்று நினைத்துக் கொண்டேன். உங்களுக்கு 2 நாட்கள் ரூம் போட்டு கொடுத்து இருக்கிறோம். கார் கொடுத்து இருக்கிறோம். குடும்பத்துடன் சென்னையை சுற்றி பார்த்துவிட்டு போங்க என்று ரஜினி சார் வீட்டில் சொன்னார்கள். உண்மையிலேயே அவர்களின் குணத்தை நினைத்து ஆச்சரியப்பட்டேன். விஜயகாந்த் சமாதி, சொந்தகாரர்கள் வீடுகளுக்கு போய் பார்த்துவிட்டு மதுரை திரும்பியிருக்கிறேன்.
எனக்கு தங்க சங்கிலி அணிவிக்கும் போட்டோ வைரல் ஆனதால், ஏகப்பட்ட மீடியாவில் பேட்டி கேட்டார்கள். அதையெல்லாம் கொடுத்துவிட்டு மனநிறைவுடன் மதுரை வந்து இருக்கிறேன். பரோட்டா வேலைகளை தொடங்கிவிட்டேன். இப்படிப்பட்ட பாராட்டு தானே என்னை போன்ற ரசிகர்களுக்கு மனநிறைவு, உற்சாகத்தை தருகிறது, யாரை முன் மாதிரியாக நினைத்து செய்தேனோ, அவரால் பாராட்டு கிடைத்து இருக்கிறது. பல ஆண்டுகளாக செய்த சேவைக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது'' என்றார் சேகர்.