தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்
தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததும் தனது தாய் மொழியான தெலுங்கில் நடிப்பதற்கு முயற்சி எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வெங்கடேசுக்கு ஜோடியாக சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான அப்படம் 310 கோடி வசூலித்து சூப்பர் ஹிட் அடித்தது. என்றாலும் அதன்பிறகு தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தற்போது திருவீருக்கு ஜோடியாக ஓ சுகுமாரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தின் ஹிட்டுக்கு பிறகு தெலுங்கில் அடுத்தபடியாக எனக்கு பெரிய இயக்குனர், நடிகர்களின் படங்கள் கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனால் ஓராண்டாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அது எனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஓராண்டுக்கு பிறகு இப்போது இளம் நடிகர் திருவீருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒருவேளை தெலுங்கு இயக்குனர்களுக்கு என்னுடைய திறமையின் மீது சந்தேகம் இருக்கலாம் என்று கருதுகிறேன். ஆனால் தற்போது நடித்து வரும் ஓ சுகுமாரி படம் அதை போக்கி என் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.