சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை
தமிழில் கடந்த வருடம் வெளிவந்த 'காந்தா' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். ஹிந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்த பின்பு தமிழில் அறிமுகமானார். விஜய் தேவரகொன்டா ஜோடியாக கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்த 'கிங்டம்', படத்திலும், ராம் பொத்தினேனி ஜோடியாக 'ஆந்திரா கிங் தலுகா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் என்ற ஊரைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. அந்த ஊரின் முன்னாள் பெயர் அவுரங்காபாத். அங்கு நடந்த அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரிடமிருந்து அந்த பிராந்தியத்தின் வளரும் திறமையாளர் என்ற விருதைப் பெற்றார் பாக்யஸ்ரீ. விருது பெறுவதற்கு முன்பாக அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இளையராஜாவிடமிருந்து விருது பெற்றது குறித்து தனது இன்ஸ்டா தளத்தில், “எனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உங்களால் கவுரவிக்கப்படுவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பெருமையாகும். உங்கள் ஆசீர்வாதங்களுடன் எனது பயணத்தைத் தொடங்குவதில் நான் மிகுந்த நன்றியுணர்வு கொள்கிறேன்.
இந்த அழகான கவுரவத்திற்காகவும், மராத்வாடாவின் மகளான என்னை இவ்வளவு அன்புடன் கொண்டாடியதற்காகவும், விழாக்குழுவக்கு நன்றி. சத்ரபதி சம்பாஜிநகரை இன்னும் பெருமைப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன், எப்போதும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.