திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம்
மலையாள திரை உலகில் கலந்த 2025ம் வருடத்திற்கான கேரள அரசு விருது பெற்ற படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. ஜனவரி 25ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள நிஷாகந்தி ஆடிட்டோரியத்தில் முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த நடிகராக மம்முட்டி விருது பெற்றார். இந்த நிகழ்வில் மலையாள பிரபலங்கள் பல பேர் கலந்து கொள்ளவில்லை, அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று சர்ச்சையும் ஒரு பக்கம் வெடித்தது.
இந்த நிலையில் மறைந்த பிரபல நடிகர் திலகனின் மகனும் வில்லன் நடிகரான ஷம்மி திலகன் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு, தனக்கு ஜனவரி 29ம் தேதி தான் வந்தது என்கிற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். “எவ்வளவு தான் கூரியர் நிறுவனம் மெதுவாக செயல்பட்டாலும் கூட இரண்டு நாட்களுக்குள் என் கைக்கு வந்திருக்க வேண்டும். 27ம் தேதி தான் இந்த அழைப்பிதழ் எனக்கு கேரள கலாச்சாரத்துறை விழா ஏற்பாட்டாளர்கள் மூலமாக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.. ஒரு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பே அழைப்பிதழ் அனுப்புவதை விட்டு விட்டு, விழா முடிந்த பிறகு இந்த அழைப்பிதழை அனுப்புகிறார்கள் என்றால் யாரை குறை சொல்வது? இது தொடர்பாக நான் கேரள கலாச்சார துறை அமைச்சரையோ அல்லது கூரியர் நிறுவனத்தையோ குற்றம் சாட்ட விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.