பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம்
1950களில் இறுதிவரை கதைப்படி இரவில் நடக்கும் காட்சிகளை இரவிலும், பகலில் நடக்கும் காட்சிகளை பகலிலும் படமாக்கி வந்தனர். தற்போது பகலிலேயே இரவு நேர காட்சிகளை படமாக்க முடியும். அதற்கென தனியான கேமராக்களும், லென்ஸ்களும் உள்ளிட்ட பல நவீன உபகரணங்கள் வந்துவிட்டது.
ஆனால் இந்த தொழில் நுட்பங்கள் வராத காலத்தில் முதன்முதலாக இரவு காட்சிகளை பகலில் படம் ஆக்கிய முதல் படம் 'மாயா பஜார்'. இந்தப் படத்தை கே.பி ரெட்டி இயக்கினார். நாகிரட்டி தயாரித்தார். என்டி ராமராவ், ஜெமினி கணேசன், சாவித்திரி, எஸ் வி ரங்காரா உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்த படத்தில் இயக்குனர் கே.வி ரெட்டி பல தொழில்நுட்ப பயிற்சிகளை செய்தார். ஒத்திகைகளின் போது, கே. வி. ரெட்டி தனது நடிகர்களின் நேரத்தை ஸ்டாப்வாட்ச் மூலம் கணக்கிட்டு, படத்தின் நீளத்தைத் தீர்மானிதார். ஒவ்வொரு காட்சியின் (பாடல்கள் உட்பட) கால அளவைக் கணக்கிட்டார். மினியேச்சர் காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. 'கல்யாண சமையல் சாதம்' பாடலில் கடோத்கஜன் லட்டுக்களை விழுங்கும் காட்சியை படமாக்க நான்கு நாட்கள் ஆனது. ஸ்டாப் மோஷன் அனிமேஷன் நுட்பத்தைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டது.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று இரவில் நடக்கும் காட்சிகள் பகலில் படமாக்கப்பட்டது. மார்க்கஸ் பேட்லி என்ற ஆங்கிலேயர் படம் பிடித்தார். அவருக்கு உதவியாக 50க்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு வல்லுனர்கள் பணியாற்றினர்.